பயிர்களுக்கு காப்பீடு செய்வது அவசியம்; வேளாண்துறை அழைப்பு
உடுமலை; விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு, 2025-26ம் ஆண்டில், காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அறிவிக்கை செய்யபட்டுள்ள பிர்கா மற்றும் வருவாய் கிராமங்களில் சாகுபடி செய்யப்படும், அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் என அனைவரும் பயிர்காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்ய, முன்மொழிவு படிவம், சிட்டா, நடப்பு ஆண்டுக்கான அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்கவேளான்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அனைத்து பொது இ- சேவை மையங்களில் பயிர்காப்பீடு கட்டனம் செலுத்தலாம். நிலக்கடலை ஏக்கருக்கு, ரூ.664; மக்காச்சோளம் ஏக்கருக்கு, ரூ.726; சோளம் ஏக்கருக்கு, ரூ.104; வாழை ஏக்கருக்கு 4,998 ரூபாய், வெங்காயம் ஏக்கருக்கு, 2, 268 ரூபாய், மரவள்ளி ஏக்கருக்கு, 1,985 ரூபாய், மஞ்சள் ஏக்கருக்கு 4,705 ரூபாய், தக்காளி ஏக்கருக்கு, 1,583 ரூபாயும் பிரிமியம் தொகையாக செலுத்த வேண்டும். நிலக்கடலை மற்றும் சோளம் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி, வரும், 30ம் தேதியாகும். வெங்காயம், தக்காளி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி, செப்.,1ம் தேதியாகும். மக்காச்சோளம், மஞ்சள், மர வள்ளி மற்றும் வாழை பயிர்களுக்கு, செப்.,16க்குள் காப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகள் காப்பீடு செய்ய கடைசி நாள் வரை காத்திருக்காமல், முன்னதாகவே, உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.