உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொலையாய் நடக்கிறது...

கொலையாய் நடக்கிறது...

அன்று கள்ளக்கிணறு...இன்று சேமலைக்கவுண்டம்பாளையம்...பல்லடம், பொங்கலுார் வட்டார பொதுமக்கள் கதிகலங்கி, வெலவெலத்து போய் உள்ளனர். பசுமையாக காட்சியளிக்கும் விவசாய பூமியில், ரத்தக்களறியாக மாறி விவசாயிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது, எதற்காக இப்படி வெட்டுகின்றனர் என துளியும் யோசிக்க கணநேரத்துக்குள், அதுவும்ஒரு நள்ளிரவில், ஒரு நொடியில் வாழ்க்கை முடிந்து போவதை யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. தண்ணீர் பாய வேண்டிய விவசாய நிலத்தில், ரத்தம் ஆறாக ஓடியதை பார்த்து கண்ணீர் சிந்தாத கண்களே இல்லை என்றே சொல்லலாம். ஆயிரம் கனவுகளை சுமந்து வாழ்ந்து வந்த அப்பாவி உயிர்கள், பறிக்கப்படுவதை யாரால் தான் சகித்து கொள்ள முடியும்.எப்போதும் அயராமல் பாடுபட்டு, வியர்வை துளிகளை மண்ணில் சிந்தி, பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளின் தோட்டத்தில், ரத்தம் சிந்திய காட்சிகளை கண்டு மனம் பதறும் விவசாயிகள், பொதுமக்கள் அச்சத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளனர். அவர்களின் பயத்தை போக்கி, இதுபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்து கொள்வது போலீசார் மட்டுமல்ல, மாவட்ட நிர்வாகத்தினர் கடமையும் கூட என பொதுமக்கள் பலரும் ஒருமித்த குரலில் கருத்துகளை உரக்க சொல்கின்றனர்.அவர்கள் சொன்னது என்ன....விழிப்புணர்வு ஏற்படுத்துங்க...பல்லடம் வட்டாரம் கொலை நகரமாக மாறி வருகிறது. கடந்த ஓராண்டுக்கு முன், கள்ளக்கிணறு பகுதியில், நான்கு பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். அதன்பின், சில மாதம் முன், சிவகங்கையைச் சேர்ந்த வினோத் கண்னன் என்ற ரவுடி, பல்லடம் அருகே, ரவுடி கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வாறு, அமைதியாக உள்ள பல்லடம் பகுதி நாளுக்கு நாள் ஆக்ரோஷமாக மாறி வருகிறது.இது, தொழில் செய்பவர்களுக்கும், வேலை தேடி வரும் தொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நேற்று சேமலைக்கவுண்டம்பாயைத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோல், தொடர்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவது கவலை அளிக்கிறது. இந்த குற்ற சம்பவங்களுக்கு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் முக்கிய காரணமாக உள்ளன. போதையில் இருப்பவர்கள் தங்களது கட்டுப்பாட்டை மீறி விடுகின்றனர். நகரப் பகுதிகளைப் போன்றே, தற்போது கிராமப்புறங்களிலும், தொழிலாளர் போர்வையில் சமூக விரோதிகள் நுழைந்து விடுகின்றனர்.கிராமத்தில் உள்ள பாமர மக்களுக்கு இது தெரிவதில்லை. எனவே, தொழிலாளர் போர்வையில் நுழையும் இது போன்ற குற்றவாளிகள், சமூக விரோதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் சமூகவிரோதிகள் நுழைந்து விடாமல் இருக்க, விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.- செல்லமுத்துஉழவர் உழைப்பாளர் கட்சிமாநிலத் தலைவர்பயம் விட்டுப்போச்சு...அலகுமலை அருகே சேமலைக் கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்தாண்டு பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில், நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு ஆறுவதற்கு முன்பே இந்த சம்பவம், இப்பகுதி மக்கள் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் இந்த ஆட்சியில் குற்றவாளிகளுக்கு சிறிதும் பயமில்லையோ என எண்ணும் வகையில் உள்ளது. அமைதியான வாழ்க்கை வாழும் கொங்கு மண்டல பகுதி மக்கள் மனதில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து விரைவான, கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வெற்றிஏர்முனை இளைஞர் அணிதலைவர்வாழத்தகுதியற்ற ஊரா...பல்வேறு வட மாநிலங்களிலும் ஒரு சில தென் மாவட்டங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது காங்கயம், பல்லடம் போன்ற திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இது போன்ற சம்பவம் நடப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பது, வாழத் தகுதியற்ற பகுதியாக இப்பகுதியை மாற்றி விடுமோ என அச்சப்பட வேண்டியுள்ளது. சம்பவம் நடந்த பின் போலீசார் நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், இது போன்ற குற்றச் செயல்கள் நடக்காமல் பாதுகாப்பதும், கண்காணிப்பதும் மிகவும் அவசியம். கிராமப் பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில் நடக்கும் பகுதிகளில் ஏதாவது ஒரு சிறு தொகையை சேமித்து வைத்திருக்கும் வயதான தம்பதியரை இலக்கு வைத்து நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கது.- ஈஸ்வரன்திருப்பூர் மாவட்ட கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர்நம்பகத்தன்மை போய்விடும்இந்த கொலை சம்பவம் கிராமப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு அளவிலான திருட்டு சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வந்த நிலையில், இது போன்ற எங்கோ ஓரிடத்தில் நடப்பதாக கேள்விப்படும் அசம்பாவிதம் இங்கு நடந்துள்ளது. இது போன்று அடிக்கடி நடப்பதால், அரசு மற்றும் போலீசார் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்துவிடும். உடமை என்பது இரண்டாம் பட்சம். உயிர் முதல் பட்சம், முக்கியமானது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என பொதுவான கருத்தாக மட்டும் கூறுவதில் பயனில்லை. உயிர்களுக்கு, உடமைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது என்பது தான் எதார்த்தமான உண்மை. குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மத்தியில் நிலவும் அச்சம் விலகும்.- கோபால்கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர்ரோந்து அதிகப்படுத்தணும்!செந்தில்குமார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகவும் அமைதியானவர்கள். எந்த வம்புக்கும் சென்றதில்லை. அவர்களுக்கு நேரடி எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை. நகை, பணத்தை திருட வந்தவர்கள் கொன்றார்களா? வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும். இனியும் இதுபோல், கொலைகள் நடக்காதவாறு இரவு நேர ரோந்தை போலீசார் அதிகப்படுத்த வேண்டும். அதேபோல், சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து, அனைவரும் எச்சரிக்கையாகவும், மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.- கார்த்திகேயன்சேமலைக்கவுண்டம்பாளையம்கடும் நடவடிக்கை வேண்டும்பொங்கலுார் ஒன்றியம், அலகுமலை வட்டாரத்தில், இதுபோன்ற கொடூரமான செயல் இதுவரை நடந்ததில்லை. தகராறு, போட்டி போன்றவை நடந்திருந்தால் நேரடியாக கொலை நடந்திருக்கும். இப்படி நடக்க வாய்ப்பில்லை. தற்பொழுது பலவீனமான சூழல் உள்ளது. இது விஷயத்தில், போலீசார் மெத்தனமாக இருக்க கூடாது. இது போன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்போது தான் குற்றவாளிகளுக்கு பயம் வரும். தொடர்ந்து இதுபோல் நடந்தால், விவசாயிகளாகிய எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அச்சத்தை போக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பது மிகமிக அவசியம்.- சண்முகசுந்தரம்கருங்காலிபாளையம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை