உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

 ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ - ஜியோ சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று, வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி உள்பட அரசு துறை அலுவலர்கள், ஏராளமானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகுமார் ஆகியோர், கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜோசப் உள்பட திரளானோர் பங்கேற்றனர். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர், ஊர்ப்புற நுாலகர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி, கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், வாகன ஓட்டுனர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். கல்லுாரி பேராசிரியர்களுக்கு, நிலுவையில் உள்ள பணி மேம்பாடு ஊக்க ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். தமிழக முதல்வர், தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாமல் மவுனம் காப்பது நியாயம் ஆகாது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள, பள்ளி கல்வித்துறையின் அரசாணைகளை ரத்து செய்யவேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ