தீபாவளி இனிப்புகளுடன் இணையும் பாரம்பரியம் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு
உடுமலை:தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பாரம்பரியமாக இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும், உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் கரும்பு சர்க்கரை உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளது. உடுமலை, மடத்துக்குளம், பழநி உள்ளிட்ட பகுதிகளில், கரும்பு சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில், விளையும் கரும்பை அறுவடை செய்து, கரும்புச்சாற்றை கொப்பரைகளில் காய்ச்சி, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் கரும்புச்சர்க்கரை உற்பத்தி செய்யும், 60க்கும் மேற்பட்ட கிரசர் ஆலைகளை விவசாயிகளே அமைத்து, பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பகுதிகளிலுள்ள கிரசர் ஆலைகளிலிருந்து, மாதம் தோறும், 150 டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு, கேரள மாநிலம், பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இப்பகுதிகளில் உற்பத்தியாகும், உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் கரும்பு சர்க்கரை உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால், விலையும் ஓரளவு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை, 30 கிலோ கொண்ட சிப்பம், அச்சு வெல்லம்,ரூ.1,320க்கு விற்று வந்த நிலையில், தற்போது, ரூ.1,350 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், உருண்டை வெல்லமும், ரூ.40 வரை உயர்ந்து, ரூ. 1,450க்கு விற்று வருகிறது. மேலும், கரும்பு சர்க்கரை விற்பனை அதிகரித்துள்ள, ஒரு சிப்பம், 1,950க்கு விற்று வருகிறது. கிரசர் ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது: பாரம்பரிய முறையில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும், வெல்லம், கரும்பு சர்க்கரை மீதான மக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது. உடுமலை சுற்றுப்பகுதிகளில் உற்பத்தியாகும் வெல்லம், கரும்பு சர்க்கரை அதிகளவு கேரளாவுக்கும், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. தீபாவளி பண்டிகையில், இனிப்பு பலகாரம் பிரதானமாக உள்ள நிலையில், இயற்கை பொருட்களால் உற்பத்தியான இனிப்பு வகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், இனிப்பு பலகாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கொள்முதல் செய்கின்றன. இதனால், உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் கரும்பு சர்க்கரை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், கடந்த வாரத்தைக்காட்டிலும், 30 கிலோ கொண்ட சிப்பத்திற்கு, ரூ.30 முதல், 50 வரை விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.