ஜே.டி., - டி.டி., வந்திருக்காங்களா? கேள்வி கேட்ட செல்வப்பெருந்தகை; பதில் சொன்ன கலெக்டர்
திருப்பூர் : ''மருத்துவத்துறை இணை இயக்குனர், துணை இயக்குனர் வந்திருக்கிறார்களா, இல்லையா... ஏன் வரவில்லை'' என, சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அதனால் அரசுக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் செலவினம் குறித்து ஆய்வு செய்ய, சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர், நேற்று, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தனர்.அப்போது, குழு தலைவர் செல்வப் பெருந்தகை, 'நாள் ஒன்றுக்கு எவ்வளவு பேர் ஸ்கேன் எடுக்க வருகின்றனர், எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள், என்ன நடைமுறை?' என கேள்வி எழுப்பினர்.உடனே, ரேடியாலஜிஸ்ட் சூர்யபிரகாஷ்,'15 முதல், 20 பேருக்கு ஸ்கேன் எடுக்கிறோம். ஒருவருக்கு, 2,500 ரூபாய் கட்டணம். முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் சரியான ஆவணங்கள் வைத்திருந்தால், இலவசமாக எடுக்கிறோம். இதே ஸ்கேனுக்கு தனியார் மருத்துவமனைகளில், 5,000 முதல், 7,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது,' என பதிலளித்தார்.''ஜே.டி., (மருத்துவ பணிகள் இணை இயக்குனர்) டி.டி., (சுகாதார பணிகள் துணை இயக்குனர்), இருக்காங்களா, யாருங்க, வந்திருக்காங்களா, பொது சுகாதாரத்துறையில் இருந்து யாரும் வரவில்லையா?'' என கேள்வி எழுப்பினர்.சில நிமிடம் அமைதி நிலவ, அருகில் இருந்த கலெக்டர் கிறிஸ்துராஜ், ''மருத்துவக் கல்லுாரி என்பதால் டீன் உள்ளார்; இணை இயக்குனர், துணை இயக்குனர் கன்ட்ரோலுக்கு இது (மருத்துவக் கல்லுாரி வளாகம்) வராது; அதனால், வரவில்லை' என்றார்.இதனை தொடர்ந்து, செல்வப்பெருந்தகை, முழு உடல் பரிசோதனை ஸ்கேனிங் அறையை பார்வையிட்டு, ஆய்வை முடித்துக் கொண்டார். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.