பயணங்கள் முடிவதுண்டு! எந்த ரயிலும் நிற்காத ஸ்டேஷன்; உயிரூட்ட பயணிகள் எதிர்பார்ப்பு
உடுமலை; அகல ரயில்பாதையில் இயக்கப்படும் ரயில்கள் நிற்காதது மற்றும் போதிய வசதிகள் இல்லாததால், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது; மதுரை ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது.திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. அகல ரயில்பாதை பணிகளின் போது, ஸ்டேஷன் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டது.அகல ரயில்பாதையில் இயக்கப்படும், பாலக்காடு - சென்னை, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார் ரயில்களும், சிறப்பு ரயில்களும் மடத்துக்குளத்தில் நிற்பதில்லை. மதுரை - கோவை ரயில் மட்டுமே இந்த ஸ்டேஷனில் நிறுத்தப்படுகிறது.இந்த ஸ்டேஷனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. மதுரை ரயில்வே கோட்டத்தில், 35 ரயில்வே ஸ்டேஷன்களில், பயணியர் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மடத்துக்குளம் ஒன்றாகும்.கணக்கீடுகளின்படி இந்த ஸ்டேஷனுக்கு, நாள்தோறும் வரும் பயணியர் எண்ணிக்கை, 70க்கும் குறைவாகவே உள்ளது. இதனால், ஸ்டேஷனின் எதிர்கால நிலை கேள்விக்குறியாகியுள்ளது.இது குறித்து அப்பகுதி பயணியர் கூறியதாவது: அகல ரயில்பாதையில் இயக்கப்படும் அனைத்து ரயில்களையும், மடத்துக்குளத்தில் நிறுத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், நடவடிக்கை இல்லை.மேலும், ரயில்வே ஸ்டேஷன் நிலைமை படுமோசமாகி விட்டது. குடிநீர் வசதி இல்லை. பகலிலும், 'குடி'மகன்கள் தொல்லை அதிகரித்து விட்டது.'ப்ளாட்பார்ம்' அருகில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கட்டடமும் பழுதடைந்து வருகிறது. இதனால், ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லவே அச்சப்பட வேண்டியுள்ளது.இரவு நேரங்களில் மின்விளக்குகளும் எரியாததால், அப்பகுதிக்கு யாரும் செல்வதில்லை. நிற்கும் ஒரு ரயிலிலும், அங்கே இறங்காமல், அருகிலுள்ள ஸ்டேஷனில் இறங்கும் நிலைக்கு பயணியர் தள்ளப்படுகின்றனர்.தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில் அமைந்துள்ள ஸ்டேஷனை மேம்படுத்தினால், ஆயிரக்கணக்கான பயணியர் பயன்பெறுவார்கள். ரயில்வேக்கும் வருவாய் அதிகரிக்கும். இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கும், மதுரை ரயில்வே கோட்டத்துக்கும் பல முறை மனு அனுப்பியுள்ளோம்.முதற்கட்டமாக ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 'டிக்கட் கவுன்டர்' மற்றும் இதர வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஸ்டேஷன் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர். புறக்கணிப்பால் வேதனை
ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே பஸ் ஸ்டாண்ட், தேசிய நெடுஞ்சாலை என பல்வேறு வசதிகள் மடத்துக்குளத்தில் உள்ளது. சுற்றுப்பகுதியில், நுாற்றுக்கணக்கான கிராமங்களும், மாவட்ட எல்லையில், அதிகளவு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதிக வருவாய் ஈட்ட வழியிருந்தும், மதுரை ரயில்வே கோட்டத்தினர் மடத்துக்குளத்தை புறக்கணித்து வருவது வேதனையளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.