அறநிலையத்துறையினர் வரவில்லை: கரைப்புதுார் மக்கள் புறக்கணிப்பு
பல்லடம் அடுத்த, கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, சென்னிமலைபாளையம் கிராமத்தில் நடந்த கிராம சபாவில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்காததால், கிராம சபாவை புறக்கணித்தனர். பொதுமக்கள் கூறியதாவது: கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 650 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று கூறி, பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்டுள்ளன. இதர மாநிலங்களில், அம்மாநில அரசுகளே முன்வந்து, இனாம் நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும், அறநிலையத்துறை, பொதுமக்களை வஞ்சித்து வருகிறது. கிராமசபா கூட்டத்துக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் கட்டாயம் வரவேண்டும் என்றும், வரவில்லை எனில், நிச்சயமாக கூட்டத்தை புறக்கணிப்போம் என்று ஏற்கனவே அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தோம். இருப்பினும், அறநிலையத்துறை சார்பில் யாருமே வரவில்லை. கேட்டால், உடல்நிலை சரியில்லை என்றும்; அலுவலர்கள் இல்லை என்றும் காரணம் கூறுகின்றனர். அறநிலையத்துறை அதிகாரிகள் வராததால் இந்த கூட்டத்தை புறக்கணித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர். ''இப்பிரச்னைக்காக சிறப்பு கிராம சபா கூட்டத்தை, அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்புடன் நடத்த வேண்டும்'' என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.