தீபாவளி ஆடைகள் ஆர்டர் உயர்கிறது காதர்பேட்டை வியாபாரிகள் மகிழ்ச்சி
திருப்பூர்:வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கான தீபாவளி ஆர்டர் அதிகரித்துள்ளதாக, செகண்ட்ஸ் பின்னலாடை வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தியா - வங்கதேசம் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. ஒப்பந்தத்தால், வங்கதேசம் தான் அதிகம் பயனடைந்து வருகிறது. இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ள நாடு என்பதால், கப்பல் வழி இறக்குமதியை காட்டிலும், தரைவழி போக்குவரத்து வழியாக நடக்கும் இறக்குமதி அதிகம். கடந்த மே மாதத்தில் இருந்து, வங்கதேச ஆடைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆடை வரத்து படிப்படியாக குறைந்துவிட்டது. தசரா, நவராத்திரி விழா விற்பனைக்கே, திருப்பூர் வந்து ஆடைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து சென்றனர். வரும் தீபாவளி விற்பனைக்காக, டில்லி, மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள், திருப்பூரில் குவிகின்றன. இதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறு வியாபாரிகளுக்கான ஆர்டர் வரத்தும் அதிகரித்துள்ளது. தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திர மாநில வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து செல்கின்றனர். ஆகமொத்தம், கடந்த ஆண்டை காட்டிலும், திருப்பூருக்கான தீபாவளி வரத்து அதிகரித்துள்ளதாக, செகண்ட்ஸ் ஆடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களில் உபரியாகும் ஆடைகள் மற்றும் ஏற்றுமதி தரத்துடன் கூடிய பின்னலாடை மற்றும் உள்ளாடைகள், 'செகண்ட்ஸ்' என்ற பெயரில் காதர்பேட்டையில் விற்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள், வாங்கி, சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்கின்றனர். கொரோனாவுக்கு பின், படிப்படியாக குறைந்து வந்த திருப்பூர் வர்த்தகம், வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பிறகு அதிகரித்துள்ளது.