உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிலைத்தன்மையை பின்னலாடை நகரம் நிரூபிக்கும்

நிலைத்தன்மையை பின்னலாடை நகரம் நிரூபிக்கும்

திருப்பூர்; 'வளம் குன்றா வளர்ச்சிக்கு திருப்பூர் சிறந்த முன்னுதாரணம்; அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பிலிருந்து விரைவில் மீண்டெழுந்து, தனது நிலைத்தன்மையை திருப்பூர் நிரூபிக்கும்' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச்செயலாளர் குமார் துரைசாமி பேசினார். சுற்றுச்சூழல் - சமூகம் - நிர்வாகம்(இ.எஸ்.ஜி.,) குறித்த கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நேற்று நடந்தது. 'பேர் டிரேட் இந்தியா' திட்டத்தின் மூத்த தலைவர் செந்தில்நாதன் வரவேற்றார். ஏற்றுமதியாளர் சங்க இணைச்செயலாளர் ஆனந்த் பேசியதாவது: ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் 'பேர் டிரேட் இந்தியா' இணைந்து, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிர்வாகம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் கிளஸ்டர், நிலைத்தன்மை, பிராண்டிங் மற்றும் வணிக மேம்பாடு போன்ற துறைகளில் அடுத்தகட்ட முன்னேற்றம் அடைய, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிர்வாக தரநிலைகள் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு, ஆனந்த் பேசினார். ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச்செயலாளர் குமார் துரைசாமி பேசியதாவது: திருப்பூரில், 2,500 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களும், 20 ஆயிரம் சார்பு நிறுவனங்களும் செயல்பட்டுவருகின்றன. நுாறு நிறுவனங்கள் மட்டுமே, 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வருமானம் ஈட்டுகின்றன. சிறிய அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனத்தினருக்கும், இ.எஸ்.ஜி., தரநிலைகளின் அவசியம் மற்றும் பயன்பாடு குறித்து புரியவைக்கவேண்டும். இந்தியாவின் பழங்கால சமுதாயங்களில், தமிழ் சமுதாயம், வளம் குன்றா வளர்ச்சி குறித்து மூவாயிரம் ஆண்டுகளாகவே அறிந்துவைத்திருக்கிறது. இதற்கான குறிப்புகள் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. திருப்பூர்தான், வளம் குன்றா வளர்ச்சிக்கான மிகப்பெரிய முன்னுதாரணம். அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பிலிருந்து மீண்டெழுந்து, தனது உறுதித்தன்மையையும், நிலைத்தன்மையையும் திருப்பூர் நிரூபிக்கும். இவ்வாறு, குமார் துரைசாமி கூறினார். ஏற்றுமதியாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை