பின்னலாடை நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் இயக்கம்
திருப்பூர்; தீபாவளி விடுமுறைக்குப்பின், பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள், இன்று முதல் மீண்டும் இயக்கத்தை துவக்குகின்றன.பெரும்பாலான பள்ளிகள், அக்., 30 முதலே மாணவர்களுக்கு விடுமுறை அளித்துவிட்டன. ஐந்து நாட்கள் தொடர் விடுமுறைக்குப்பின், பள்ளிகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கின்றன. சொந்த ஊர் சென்ற வெளி மாவட்ட தொழிலாளர்களும், பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்து, குடும்பத்தினருடன் விரைவாக திருப்பூர் திரும்பிவருகின்றனர்.வடமாநில தொழிலாளர் அனைவரும் இன்று முதல் பணிக்கு திரும்பிவிடுவர். தமிழக தொழிலாளர்கள், அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக பணிக்கு திரும்புவர். வரும் 11ம் தேதிக்குள் தொழிலாளர் வருகைப்பதிவு நுாறு சதவீதத்தை எட்டிவிடும்; நிறுவனங்கள் இயல்பான உற்பத்தி நிலைக்கு திரும்பும் என்கின்றனர், பின்னலாடை துறையினர். பராமரிப்பு பணி துவக்கம்
திருப்பூரில், 18 பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு உட்பட்டு, 470 சாய ஆலைகள் இயங்கு கின்றன. சுத்திகரிப்பு மையங்கள் நேற்றுமுதல் பராமரிப்பு பணிகளை துவக்கியுள்ளன. பராமரிப்பு பணிகள் முடிந்து, வரும் 6 ம் தேதி முதல், சாய ஆலைகளும், பொது சுத்திகரிப்பு மையங்களும் மீண்டும் இயக்கத்தை துவக்குகின்றன.