பின்னலாடை நிறுவனங்கள் நாளை முதல் வேகமெடுக்கும்
திருப்பூர்: தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பின், நாளை முதல், முழு வீச்சில் பனியன் நிறுவனங்கள் இயங்க உள்ளன; அதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. திருப்பூரில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் வசிக்கின்றனர். அத்துடன், பீஹார், ஒடிசா உட்பட, 21 மாநிலங்களை சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்காக, வெளிமாவட்ட மக்கள், சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக, பனியன் நிறுவனங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலைகளிலும், பொங்கல் மற்றும் தீபாவளிக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்காக, கடந்த, 18ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, 'நிட்டிங்', பிரின்டிங், காம்பாக்டிங், சாய ஆலைகள், பிளீச்சிங் ஆலைகள் என, அனைத்து நிறுவனங்களுக்கும் தொடர்விடுமுறை அளிக்கப்பட்டது. பண்டிகை விடுமுறை ஒன்பது நாட்களுக்கு பின், இன்று முதல் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தியை வேகப்படுத்த உள்ளன. அதற்காக, கைவசம் உள்ள தொழிலாளர்களை கொண்டு, கடந்த இரண்டு நாட்களாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி பணியை உடனே துவக்க ஏதுவாக, முன்கூட்டியே, சாயமிடப்பட்ட துணிகள் தயார்நிலையில் உள்ளன. கட்டிங் செய்யப்பட்ட துணிகள், பிரின்டிங் மற்றும் எம்பிராய்டரிங் நிறுவனங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். இன்று முதல், நிட்டிங், சாய ஆலைகள் உள்ளிட்ட 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும் முழு வேகத்தில் இயங்க துவங்கும் என, உரிமையாளர்கள் தெரிவித்தனர். வடமாநில தொழிலாளர் பெரும்பாலான வடமாநில தொழிலாளர், தங்கள் சொந்த ஊருக்கு செல்லவில்லை. தீபாவளி, மறுநாள் என இரண்டு நாட்கள் விடுமுறையை தொடர்ந்து, 30 சதவீதம் அளவிலான பணிகள், 23ம் தேதி முதல் துவங்கிவிட்டது. இருப்பினும், மொத்த உற்பத்தி பணியை முடிக்க முடியாது என்றாலும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வைக்க முடிந்தது. இடமாறும் தருணம் திருப்பூரை பொறுத்தவரை, தீபாவளி பண்டிகைக்கு பின்னர் தான், வாடகை வீடு மாறுவதும், தொழிலாளர் மற்றும் அலுவலர்கள் வேறு தொழிற்சாலைகளுக்கு செல்வதும் அதிகரிக்கும். வழக்கமான தொழிலாளர் கைவசம் உள்ள தொழிற்சாலைகளில் பாதிப்பு இல்லை. தொழிலாளர் இடமாறும் தொழிற்சாலைகளில், வடமாநில தொழிலாளர்களை கொண்டு சில வாரங்கள் சமாளிக்க வேண்டும்; அதற்குள், நன்கு அனுபவம் வாய்ந்த தொழிலார்கள் வேலைதேடி வந்துவிடுவர் என, பனியன் நிறுவன உரிமையாளர்கள் கூறுகின்றனர்.