உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பின்னலாடை தொழிலாளர் சம்பளம்  நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தை

 பின்னலாடை தொழிலாளர் சம்பளம்  நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தை

திருப்பூர்: பரபரப்பான சூழலில், பின்னலாடை தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்கும், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், நாளை நடக்க உள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சம்பள உயர்வு ஒப்பந்தம் உருவாக்கப்படுகிறது. தொழிற்சங்கங்களும், உற்பத்தியாளர் சங்கங்களும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளருக்கு சம்பள உயர்வை நிர்ணயித்து, ஒப்பந்தம் செய்கின்றன. முந்தைய ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்(டீ), தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம்(சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா), தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் ( சிம்கா), திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் (டெக்மா) ஆகிய ஆறு உற்பத்தியாளர் சங்கங்களும், ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., - ஐ.என்.டி.யு.சி.,- --எல்.பி.எப்., - ஏ.டி.பி., - எச்.எம்.எஸ்., - பி.எம்.எஸ்., -- எம்.எல்.எப்., -- டி.டி.எம்.எஸ்., ஆகிய ஒன்பது தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. கடந்த, நவ. 20ல் நடத்தப்பட்ட முதல் கட்ட பேச்சுவார்த்தையும், டிச. 5ல் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்துள்ளது. தொழிற்சங்கங்களின் பொது கோரிக்கையை, உற்பத்தியாளர் சங்கங்கள் பரிசீலித்து முடிவு செய்யலாம் என அறிவித்துள்ளன. தொழிற்சங்க கூட்டுக்குழு, பேச்சுவார்த்தை கோரிக்கை தொடர்பாக, தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவ்வகையில், 120 சதவீத சம்பள உயர்வு, பஞ்சப்படியாக மாதம் 5 ஆயிரம் ரூபாய், பயணப்படியாக, 50 ரூபாய், வீட்டு வாடகை படியாக, 3 ஆயிரம் ரூபாய், ஓவர் டைம் பேட்டாவில், 100 சதவீத உயர்வு, 'குரூப் இன்சூரன்ஸ்' உள்ளிட்ட பொது கோரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளன. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 3வது கட்ட பேச்சுவார்த்தை, நாளை (26ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடக்கிறது. பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமாக, தொழிற்சங்கத்தினரும், உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளும், தனித்தனியே ஆலோசித்து வருகின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று, உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ