கள் குறித்த கிருஷ்ணசாமி கருத்து; விவசாயிகள் சங்கம் சவால்
பல்லடம்; 'கள்' குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி அறிக்கை: தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில், ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும், தமிழகம் முழுவதும் 'கள்' இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இச்சூழலில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 'கள்' ஆபத்தானது; கள் இறக்க அனுமதி வழங்கினால் கிராமங்கள் தோறும் நாட்டு சாராயம் காய்ச்சுதல் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். தமிழர்களின் மரபு உணவு பானமான 'கள்' ஆபத்தானது, அனுமதி வழங்கக் கூடாது என்று கூறிய கிருஷ்ணசாமியை கண்டிக்கிறோம். இவரது கருத்து தென்னை விவசாயிகள் மனதை காயப்படுத்துவதாக உள்ளது. 'கள்' ஒரு உணவு என்பதை நிரூபிக்க நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் சவாலை ஏற்க கிருஷ்ணசாமி தயாரா என்று கூறட்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.