சப்- இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொன்றவரை தேடி பிடித்து என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது குடிமங்கலம் போலீஸ்
உடுமலை; திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள சிக்கனுாத்து கிராமத்தில் உள்ள, மடத்துக்குளம் எம்.எல்.ஏ.,மகேந்திரன் தென்னந்தோப்பில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரை சேர்ந்த மூர்த்தி, 60, அவரது மகன்கள் மணிகண்டன்,30, தங்கபாண்டி,27. பணியாற்றி வந்தனர். கடந்த, 5 ம் தேதி இரவு, மது போதையில் மூன்று பேரும், சண்டையிட்டு, அடிதடியில் ஈடுபட்டனர். குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், ஆயுதபடை காவலர் அழகுராஜா ரோந்து வாகனத்தில் சம்பவ இடத்திற்குச்சென்றனர். அப்போது, ''எங்கள் குடும்ப பிரச்னைக்குள் போலீஸ் எப்படி வரலாம்'' என, ஆவேசமாக கூறிய தந்தை மற்றும் மகன்கள் இரும்பு ராடால் தாக்கியதோடு, மணிகண்டன் அரிவாளால் வெட்டியதில் எஸ்.ஐ. சண்முகவேல் உயிரிழந்தார். ஏழு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் மூன்று பேரையும், நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். நேற்று காலை, 6:00 மணியளவில், கைது செய்தவர்களை, குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். எஸ்.ஐ. கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை, மணிகண்டன், உப்பாறு ஓடைக்குள் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் திருஞானசம்மந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே அரிவாளை எடுத்த மணிகண்டன், எஸ்.ஐ. சரவணகுமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயற்சித்தாராம். 'தங்களை தற்காத்துக்கொள்ள மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டபோது, தலையில் குண்டு பட்டு, கீழே விழுந்து இறந்து விட்டார்,' என போலீசார் தெரிவித்தனர். எஸ்.ஐ. சரவணகுமார் உடுமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மணிகண்டன் உடல், உடுமலை அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டு, திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 'என்கவுன்டர்' நடந்த இடத்தை மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், எஸ்.பி.யாதங் கிரிஷ் அசோக் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வழக்கில் தொடர்புடைய மூர்த்தி,60 மற்றும் தங்கபாண்டி, 27, ஆகியோரையும் போலீசார் கைது செய்து, உடுமலை மாஜிஸ்திரேட் நித்யகலா முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். எஸ்.ஐ.சண்முகவேல் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமும், மணிகண்டன் 'என்கவுன்டர்' செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பா, தம்பி பீதியில் கதறல்
கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின், குற்றவாளிகள் இருவரையும் சிறைக்கு அழைத்து சென்றபோது, மூர்த்தி,'' என் மகனை கொன்னுட்டீங்களே'' என கதறி அழுதார். தங்கபாண்டி, ''எங்கள் உயிருக்கு ஆபத்து என்றால், 'எஸ்கார்டு' வரும் போலீசாரே பொறுப்பு. காலையில், அண்ணனை எங்களுக்கு காட்டுனாங்க; உடனே கொன்னுட்டாங்க; கண்ணை கட்டி கொண்டுபோய் சுடுவதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா,'' என ஆவேசமாக கதறினார். இதனால், அங்கே இன்னும் பதற்றம் ஏற்பட்டது.