உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொடி காக்கத் தன்னுயிரைக் கொடுத்தார் குமரன்! என்றும் வரலாற்றில் நிலைத்தார்

கொடி காக்கத் தன்னுயிரைக் கொடுத்தார் குமரன்! என்றும் வரலாற்றில் நிலைத்தார்

தேசம் மீதுள்ள பாசத்தாலும், தேச விடுதலை மீதுள்ள வேட்கையாலும், தனது, 28 வயதிலேயே விடுதலை போராட்டத்தில் பங்கேற்று, இன்னுயிரை துறந்தவர் தான் திருப்பூர் குமரன். திருப்பூரின் வரலாற்று பக்கங்களில் அழிக்க இயலா அடையாளம் குமரன். ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் செ.மேலப்பாளையம் என்ற சிற்றுார் தான், குமரன் பிறந்த இடம். நெசவு தொழிலாளிகளான நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியரின் மகன். நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் திருப்பூருக்கு இடம் பெயர்ந்தது, அவரது குடும்பம். 1923ல், ராமாயி என்பவரை மணமுடித்தார் குமரன். தேச விடுதலையில் வேட்கை கொண்ட அவர், விடுதலை தொடர்பான போராட்டங்கள், கூட்டங்கள் என அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சுதந்திர வேட்கையில் பற்றியெறிந்த அவரது உணர்வு, பிரிட்டிஷாரின் கவனத்தை ஈர்க்க, பிரிட்டிஷ் போலீசாரால் கண்காணிக்கப்படும் நபர்களில் ஒருவராக மாறினார். கடந்த, 1932 ஜன., 10ம் தேதி திருப்பூரில் பி.எஸ்.சுந்தரம் தலைமையில் நடந்த சட்ட மறுப்பு இயக்க போரட்டத்தில், திருப்பூர் குமரன் உட்பட, 10 பேர் பங்கேற்றனர். கையில் தேசிய கொடி ஏந்தி, 'வந்தே மாதரம்' கோஷம் முழங்க வீறுநடை போட்ட குமரனை, போலீசார் 'தரதர' வென இழுத்து பூட்ஸ் காலில் மிதித்து, அடிக்க துவங்கினர்; அவர்களது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், நிலைகுலைந்து சரிந்தார் குமரன். இருப்பினும், அவரது கையில் வலுவாக பிடித்திருந்த நம் நாட்டின் கொடி மட்டும், தலை கவிழாமல் விண்ணை நோக்கி கம்பீரமாக பறந்துக் கொண்டிருந்தது. உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குமரனின் உயிர், அங்கு பிரிந்தது என்பது வரலாறு. வெளிநாட்டிலும் குமரன் புகழ்'நாட்டின் விடுதலையை ஒவ்வொருவரும் போற்ற வேண்டும்; தங்கள் வீடுகளில் அதற்கான அடையாளத்தை உருவாக்க, வீடுதோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்' என்ற எண்ணத்தில், 'ஹர் கர் திரங்கா' என்ற இயக்கத்தை முன்னெடுத்துள்ளார் பிரதமர் மோடி. தேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை, வெளிநாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையில், லண்டனில் செயல்படும் இந்திய உயர் கமிஷன், இந்திய கலாசார துறை சார்பில், இந்திய விடுதலை போராட்ட தியாகிகளின் சிறுகுறிப்பு அடங்கிய வெளியிட்டுள்ளது. அதில், திருப்பூர் குமரன் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. பெயர் சொல்லும் பஸ் ஸ்டாண்ட் குமரனின் நினைவாக, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே நினைவகம் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது, திருப்பூர் கோவில் வழி என்ற இடத்தில் தமிழக அரசின் சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, சமீபத்தில் திறப்பு விழா கண்டது. அந்த பஸ் ஸ்டாண்டுக்கு திருப்பூர் குமரன் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.திருப்பூர் குமரனின் பேரன் நிர்மல்ராஜ் கூறுகையில், ''திருப்பூரில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களுக்கு திருப்பூர் குமரன் பெயர் சூட்ட வேண்டும் என்பது எங்களின் மிக நீண்ட நாளைய கோரிக்கை. அந்த கோரிக்கையை ஏற்று, கோவில் வழியில் அமைக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டிற்கு திருப்பூர் குமரன் பெயர் சூட்டி, அதை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி