அடிப்படை வசதிகள் இல்லை: செவிசாய்க்காத மாநகராட்சி
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, முதல் வார்டு செட்டிபாளையம் தியாகி குமரன் காலனி 6வது வீதியில் சாக்கடை கால்வாய், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: வீதியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு உருவாகி, 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ரோடு மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து, வெளியேறும் கழிவு நீரை அந்தந்த வீட்டு உரிமையாளர்களே சொந்த செலவில் உறிஞ்சுகுழி அமைத்து தேக்கி வருகின்றனர். மண் ரோடு என்பதால், மழை நேரங்களில் ரோடுகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. பொதுமக்கள் நடந்துகூட செல்லமுடியாது. குண்டும், குழியுமாக இருப்பதால், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். பலருக்கும் கை, கால் முறிவு ஏற்பட்டது. இங்கு ஆறு குறுக்கு வீதிகள் உள்ளன. ரோடு வசதி இல்லாததால் வீதிகளில் முட்புதர்கள் மண்டி ரோடு குறுகி ஒத்தையடி பாதையாக உள்ளது. இப்பகுதியில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களை ஏற்ற வாகனங்கள்கூட உள்ளே வரமுடியாத நிலை உள்ளது. மாணவர்களை மெயின் ரோட்டுக்கு அழைத்து சென்று வாகனத்தில் ஏற்றுகிறோம். குப்பை வண்டிகூட குப்பை எடுக்க சரியாக வருவதில்லை. ரோடு, சாக்கடை கால்வாய் வசதி கேட்டு பல முறை போராட்டம் நடத்தி உள்ளோம். மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நாங்களே அடிப்படை வசதி செய்து கொள்ள அனுமதி கேட்டும் நடவடிக்கை இல்லை.