குடிநீர், கழிப்பிடம், மைதான வசதிகள் இல்லை; அரசுப்பள்ளியில் அவலம்
பல்லடம்; குடிநீர், கழிப்பிடம், பராமரிப்பற்ற மைதானம் என பல்லடம் அருகே, காளிநாதம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, போதிய கட்டமைப்புகள் இன்றி அமைந்துள்ளது. பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட காளிநாதம்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, போதிய இடவசதி இல்லாததால், நான்கு வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டடம், பொன் நகர் பகுதியில் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: கழிப்பிட வசதி இல்லாமல் தான், பள்ளி கட்டட கட்டுமான பணி நிறைவடைந்தது. புகார்களை தொடர்ந்து கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு, பள்ளி செயல்பாட்டுக்கு வந்தது. மாணவர் எண்ணிக்கைக்கு இணையாக, கழிப்பிட வசதிகள் இல்லை. பெரும்பாலான மாணவர்கள், வெளியே சென்றுதான் சிறுநீர் கழிக்கின்றனர். தேவையான இட வசதி இருந்தும், விளையாட்டு மைதானம் இல்லாமல், மாணவர் தனித்திறமை முடங்கிக் கிடக்கிறது. பள்ளி வளாகம் முழுவதும், கற்கள், பாறைகள், செடி - கொடிகள் மற்றும் முட்கள் ஆக்கிரமித்துள்ளன. பள்ளி வளாகம் வழியாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில், மின் கம்பிகள் செல்கின்றன. பள்ளி பயன்பாட்டுக்கு வந்து, ஓராண்டு ஆன நிலையில், இதுநாள் வரை குடிநீர் இணைப்பு கிடையாது. அருகிலுள்ள பொது குடிநீர் இணைப்பில் இருந்து, குடங்களில் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது எவ்வாறு மாணவர்களுக்கு முழுமையான பயனை தரும்? ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, 'குடிநீர், கழிப்பிடம் மற்றும் ரோடு வசதி ஆகியவை குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பள்ளி மேலாண் குழுவினரிடம் தெரிவித்துள்ளோம். செய்து தருவதாக கூறியுள்ளனர்' என்றனர்.