உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறன் குழந்தைகளிடமும் மாற்றத்தைக் கொண்டு வருவோம்

மாற்றுத்திறன் குழந்தைகளிடமும் மாற்றத்தைக் கொண்டு வருவோம்

பல்லடம்: உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை பராமரிப்பது என்பது, சவாலான காரியம். இதுபோன்று பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே, தமிழக அரசு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், வட்டாரவள மையங்கள் செயல்படுகின்றன.பல்லடம் வட்டார வள மைய பயிற்சி ஆசிரியர் பரிமளம் கூறியதாவது:வட்டார வள மையத்தில், 6 முதல் 18 வயது வரையிலான அனைத்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு, மன வளர்ச்சி குறைபாடு, ஆட்டிசம், கை, கால் இயக்க குறைபாடு உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தேவையான பேச்சு, எழுத்து பயிற்சிகள் மற்றும் பிஸியோ தெரபி மூலம் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. குழந்தைகளை பராமரிப்பதற்காக பயிற்சி ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளியைப் போன்றே செயல்பட்டு வரும் இந்த பயிற்சி மையத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, தமிழக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாதம் 2 ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது. பயிற்சி மையத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு மதிய உணவு தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு, பஸ் மற்றும் ரயில் கட்டணம் சலுகைகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழக அரசு சார்பில், படிப்பதற்கு, விளையாடுவதற்கு மற்றும் பயிற்சிக்கு உண்டான அனைத்து உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளை பயிற்சி மையத்துக்கு அழைத்து வருவதற்கான வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கையே வாழ்க்கை

மனவளர்ச்சி குன்றிய, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு, அவர்களின் திறனுக்கு ஏற்ப, பயிற்சி உபகரணங்களை பயன்படுத்தி தேவையான பேச்சு, எழுத்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. எழுதப் படிக்க முடியாத குழந்தைகளுக்கு, விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி, கல்வி அறிவு போதிக்கப்படுகிறது.கல்வி மட்டுமன்றி, யோகா பயிற்சியும் வழங்குகிறோம். பள்ளி அளவில் மாணவ, மாணவியர் விளையாடக்கூடிய அனைத்து விளையாட்டுகளில் மாற்றுத்திறன் குழந்தைகளும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இங்கு பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் கல்வி கற்று நல்ல நிலையில் முன்னேறுகின்றனர். நடக்க முடியாமல், எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் கூட, தமிழக அரசு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பயன்களை அளிக்கிறது.பள்ளி அளவில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயணப்படி வழங்கப்படுவதுடன், அவர்களை அழைத்து வரும் பெற்றோருக்கும் தமிழக அரசு பயணப்படி வழங்குகிறது.மாற்றுத்திறனாளி குழந்தைகளும், மற்ற குழந்தை களைப் போல் இந்த சமுதாயத்தில் முன்னேற முடியும் என்பதற்காகவே வட்டார வள மையங்கள் செயல்படுகின்றன. பல்லடம் வட்டாரத்தில் இது போன்ற மன வளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறன் குழந்தைகள் இருந்தால், தாராளமாக வட்டார வள மையத்தில் சேர்க்கை பெற்று பயன்பெறலாம். மாற்றுத்திறன் குழந்தைகளாலும் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கு வேண்டும்.இவ்வாறு, பரிமளம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ