நம் தேசத்தைக் காப்போம்
திருப்பூர், பெரிய பள்ளிவாசல் இமாம் சல்மான் பாரிஸ் பாகவி:காஷ்மீரில் நிராயுதபாணியாக இருந்த அப்பாவிகள் மீது நடந்த தாக்குதலை, அனைத்து தரப்பினரும் கண்டித்துள்ளனர். நிராயுதபாணியான பொதுமக்கள் மீது ஆயுத பிரயோகம் வடிகட்டிய கோழைத்தனம்.மத்திய அரசு இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை துல்லியமாகக் கண்டறிந்து, மக்கள் மத்தியில் அவர்களுக்கு கடும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். கடும் பாதுகாப்பும், ராணுவ நடமாட்டமும் உள்ள பகுதியில் இது நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது.இத்தகைய இடங்களில், மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்; குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் தேவை.கொடூரத் தாக்குதலை கண்டிப்பதோடு, இதற்கு மதச்சாயம் பூசுவதையும் கண்டிக்கிறோம். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. மதங்களை மதிக்கும் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபட மாட்டார்கள்.பொய்யான செய்திகளுடன் முஸ்லிம் சமூகத்தோடு இதை தொடர்புபடுத்து அறமற்ற செயல். பாதிக்கப்பட்டோரை அங்கிருந்த இஸ்லாமியர்கள் காப்பாற்றி உதவி செய்துள்ளனர். ஒருவர் உயிரையும் இழந்துள்ளார்.ஒரு சமூகத்தை இதில் தொடர்புபடுத்தாமல் இந்நாட்டின் குடிமகனாக நாம் ஒவ்வொருவரும் இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இதில் ஈடுபட்டவர்களுக்கு தரப்படும் தண்டனை இனிமேல் இது போல் செயல்பட நினைக்கும் ஒவ்வொருவரும் அஞ்சி நடுங்கும் வகையில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆதரவாக இருப்போம். தீவிரவாதத்தை வேரறுப்போம். இந்திய நாட்டை காப்போம்.இவ்வாறு, சல்மான் பாரிஸ் பாகவி கூறினார்.அரசுடன் இணைந்து நிற்போம்வருங்கால இந்தியாவை வளமாக்குவோம்திருப்பூர், பெரியதோட்டம், மஸ்ஜிதே நுார் பள்ளிவாசல் தலைமை இமாம் மற்றும் திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவுலவி முப்தி உமர் பாரூக் மழாஹிரி:காஷ்மீரில் நடந்த தாக்குதல் ஒட்டுமொத்த மனித இனத்தை நிலைகுலைய செய்துள்ளது. அப்பாவி மக்கள் மீதான தாக்குதலால் அம்மாநில மக்கள் நிம்மதியும் குலைந்துள்ளது.இஸ்லாமிய மார்க்கமும், இஸ்லாமியர்களும் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரித்ததும் இல்லை; ஆதரிக்க போவதும் இல்லை. இந்திய சுதந்திரப் போரில், உடல், உயிர், பொருளை தியாகம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள்.இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை செய்தது யாராக இருந்தாலும் உரிய தண்டனை கிடைக்க வைப்பது தான் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நாம் செய்யும் மகத்தான உதவி.சம்பவ இடத்தில் இருந்த மக்களுக்கு உதவிய காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கும் சேவைகளுக்கும் நன்றி.இஸ்லாம் போதிப்பது, மார்க்க நல்லிணக்கம், மத நல்லிணக்கம், மனித நல்லிணக்கம். எங்குமே தீவிரவாதத்தை ஆதரித்தது இல்லை. தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது இந்த அரசின் கடமை. அதற்கு இந்திய இஸ்லாமிய சமூகம் அரசுடன் இணைந்து நிற்போம். வருங்கால இந்தியாவை வளமாக்குவோம்.