தீபாவளி மது விற்பனை மந்தம்
திருப்பூர்; தமிழகத்தில் தீபாவளியையொட்டி மது விற்பனை நிலவரம், இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் வாயிலாக மட்டுமே வெளியிடப்படும் எனத் தெரிகிறது. மது விற்பனை அளவு குறித்து மாவட்ட மேலாளர்கள், முதுநிலை மண்டல மேலாளர்கள் யாரும் வெளியே தகவல் தெரிவிக்க கூடாது என வாய்மொழி பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தினமும் சராசரியாக 7 கோடி ரூபாய் அளவு மது விற்பனையாகிறது. தீபாவளிக்கு இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.திருப்பூரைப் பொறுத்தவரை, டாஸ்மாக் மதுக்கடைகள் மட்டுமின்றி, உரிமம் பெற்ற தனியார் 'ஏசி' பார்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் பார்கள் அதிகளவில் உள்ளன. பண்டிகை நாளில் டாஸ்மாக் மதுக்கடைகளில் வழக்கமான கூட்டத்தை விடவும் குறைந்த அளவு கூட்டம் காணப்பட்டது. விற்பனையும் எதிர்பார்த்த அளவில் இல்லை என கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.தனியார் பார்களை நாடிச் சென்ற மதுப்பிரியர்கள்; பெருமளவு வெளி மாவட்ட, வெளி மாநிலத்தினர் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று விட்டது உள்ளிட்ட சில காரணங்களால் டாஸ்மாக் கடைகளில் எதிர்பார்த்த விற்பனை இல்லை.