உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்டேஷனை முற்றுகையிட்டு  மா.கம்யூ., போராட்டம் 

ஸ்டேஷனை முற்றுகையிட்டு  மா.கம்யூ., போராட்டம் 

உடுமலை; மூதாட்டி, விவசாயியை அவமதித்து மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை மா.கம்யூ., கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை அருகே சோமவாரப்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 80; இவருக்கு சொந்தமான நிலம் அருகே வழித்தட பிரச்னை குறித்து, உடுமலை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், சுப்புலட்சுமி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது; விசாரணைக்கு வரவும் என குடிமங்கலம் போலீசார் அழைத்துள்ளனர்.மூதாட்டி, உறவினர் தங்கவேலுடன் ஸ்டேஷனுக்கு சென்ற போது, அங்கிருந்த இன்ஸ்பெக்டர், இருவரையும், தரக்குறைவாக பேசி மிரட்டியதாக வேதனையுடன் உடுமலை டி.எஸ்.பி., யிடம் புகார் தெரிவித்துள்ளனர். தகவல் தெரிந்த, மா.கம்யூ., கட்சியினரும் குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி., நமச்சிவாயம், மா.கம்யூ., கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.'மூதாட்டி, விவசாயியை தரக்குறைவாக பேசி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், மூதாட்டியை மிரட்டும் வகையில் செயல்படும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என மா.கம்யூ., கட்சியினர் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, மா.கம்யூ., கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில், பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ