கோடையில் கொட்டிய மாமழை
திருப்பூர்: கோடைக்காலத்தில் திருப்பூர், ஊத்துக்குளி, அவிநாசி பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு துவங்கி நேற்று அதிகாலை வரை கொட்டிய கனமழை, வெம்மையைப் போக்கியது. அதேசமயம், சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதியுற்றனர்.கோடைக்காலம் துவங்கிய நாளில் இருந்தே, திருப்பூர் மாவட்டம் முழுவதும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நேற்று முன்தினம், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தது. யாரும் எதிர்பாராத வகையில், மாலை, 6:30 மணிக்கு மேல், சில இடங்களில் மட்டும் மழை தலைகாட்டி சென்றது. இரவு முதல் அதிகாலை வரை
இரவு, 11:15 மணி முதல், மீண்டும் மழை துவங்கியது; தொடர்ந்து, இடி, மின்னலுடன் கனமழை பெய்ய துவங்கியது. கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்தமழையால் திருப்பூர் சுற்றுப்பகுதி குளிர்ந்தது. இரவு நேர மழையால், பொதுமக்களுக்கு அதிக சிரமம் இல்லை. இருப்பினும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.மாவட்டத்தில், கலெக்டர் முகாம் அலுவலகம் - 150 மி.மீ., கலெக்டர் அலுவலகம் - 130 மி.மீ., ஊத்துக்குளி தாலுகா - 120 மி.மீ., திருப்பூர் வடக்கு தாலுகா - 110 மி.மீ., திருப்பூர் தெற்கு தாலுகா - 96 மி.மீ., அவிநாசி - 75 மி.மீ., பல்லடம் - 28 மி.மீ., திருமூர்த்தி அணை பகுதி - 25 மி.மீ., காங்கயம் - 4.60 மி.மீ., தாராபுரம் - 2 மி.மீ., உப்பாறு அணை - 10 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. வீடு இடிந்தது
அவிநாசி சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது. அன்னுார் ரோட்டில், ரோடு விரிவாக்க பணி நடந்து வருவதால், சில இடங்களில் தண்ணீர் செல்வது தடைபட்டு, தேங்கியது. பெரும்பாலான இடங்களில் மண்பாதையில் தண்ணீர் தேங்கி, 'டூ வீலர்'கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டது. கருவலுார் அண்ணா நகர் பகுதியில், பழனியம்மாள் என்பவரின் வீடு மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இடிந்தது. குடியிருப்பில் வெள்ளம்
திருப்பூர் வடக்கு தாலுகா, மண்ணரை கிராமத்துக்கு உட்பட்ட அறிவொளி நகரில், இரவு பெய்த மழையால், 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நல்லாற்றை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர் நேற்று காலை முதல் வடியத்துவங்கியது.கொங்கு மெயின் ரோடு, பெத்திசெட்டிபுரம், பாண்டியன் நகர், சாமுண்டிபுரம் என, பல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது. தாழ்வாக உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெளியேற முடியாமல் முட்டி கால் அளவுக்கு தண்ணீர் நின்றது.பி.என்., ரோடு பகுதியில், பிச்சம்பாளையம் புதுார் பஸ் ஸ்டாப் அருகே, ரோட்டில் அதிக அளவு மழைநீர் தேங்கியது. புதிய வடிகால் அமைத்த பிறகு, தண்ணீர் செல்வது தடைபட்டு, ரோட்டில் மழைநீர் தேங்குகிறது. இதன்காரணமாக, நேற்றும் சாக்கடை கழிவு, மழைநீர் கலந்து, ரோட்டில் தேங்கியது; மக்கள் அதன்மீது நடந்து சென்றுவருவதால், சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.கஞ்சம்பாளையம், அறிவொளி நகர் பகுதி; நல்லாத்துபாளையம் ரோடு, திருநகர் பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்; சில பகுதிகள், மழைநீர்தேங்கி தீவு போல் மாறின.
சுழன்று பணிபுரிந்த
தீயணைப்பு வீரர்கள்பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது, இரண்டு இடங்களில் இடி தாக்கி தீ விபத்து ஏற்பட்டது. இதுபோன்ற அடுத்தடுத்து மக்களிடம் வந்த தகவல்களால் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை என, ஓயாமல் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று திருப்பூர் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.சாமுண்டிபுரத்தில் மழை நீரால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வீட்டுக்குள் வருவதாக தகவல் கிடைத்து சரி செய்தனர். புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சில வீடுகளுக்குள் தண்ணீர் செல்லவே, அங்கிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.