கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்; தொட்டம்பட்டியில் இன்று நடக்கிறது
உடுமலை : உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் கண்காட்சி தொட்டம்பட்டியில் இன்று நடக்கிறது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், கால்நடை வளர்ப்பு பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோழிக்குட்டையில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரி சார்பில், இன்று, (24ம் தேதி), கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் கண்காட்சி தொட்டம்பட்டி கிராமத்தில், காலை, 9:00 மணி முதல் நடக்கிறது.முகாமில், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை; குடற்புழு நீக்கம், பொது உடல்; சினை; கருப்பை நோய்; மிதமடி நோய் பரிசோதனை செய்யப்படும். கால்நடைகளுக்கான ஸ்கேன் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உண்ணி வீக்கம், மடிவீக்க நோய் தடுப்பு முறைகள், மரபு சார் மூலிகை மருந்து தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்படும்.அறிவியல் முறைப்படி கால்நடைகளுக்கு தீவனம் அளித்தல் மற்றும் உற்பத்தியை அதிகப்படுத்துதல் குறித்த கருத்தரங்கும் நடைபெறுகிறது. மேலும், கால்நடைகள் வளர்ப்பு முறைகள் குறித்த கண்காட்சியும் நடக்கிறது.சுற்றுப்பகுதி கால்நடை வளர்ப்போர், இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.