பால் கூட்டுறவு சங்கங்கள் மூடப்படும் அபாயம்
பல்லடம்: உற்பத்தியாளர்கள், பால் வழங்காததால், தமிழகம் முழுவதும் ஆவின் பால் கூட்டுறவுச்சங்கங்கள் மூடப்படும் நிலை நிலவுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 45 சங்கங்கள் இயங்கவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மூலம், கால்நடை வளர்ப்போரிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு பால் வினியோகிக்கப்படுகிறது. பால் விலையை உயர்த்தி வழங்குமாறு, ஆவின் நிர்வாகத்திடம், பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கட்டுப்படியாகாத விலை காரணமாக, பெரும்பாலான விவசாயிகள், ஆவின் கூட்டுறவு சங்கங்களை தவிர்த்து, தனியார் பால் கொள்முதல் நிலையங்களுக்கு பால் வினியோகித்து வருகின்றனர். இதனால், ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து குறைந்து, பல கூட்டுறவு சங்கங்கள் மூடக்கூடிய அபாயம் நிலவுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், சில ஆண்டுகளில் மட்டும், 45 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படாமல் உள்ளன. பல்லடத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளித்த மனுவுக்கு, கூட்டுறவு சார் பதிவாளர் அருள்மொழி அளித்த தகவல்: திருப்பூர் மாவட்டம் முழுவதும், 452 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன இவற்றில், 39,132 கால்நடை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி, 1.80 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சங்க உறுப்பினர்கள் பால் வழங்காததால், மாவட்டத்தில் இ.வடுகபாளையம், எஸ். வேலாயுதம்பாளையம், கே.ஆண்டிபாளையம், மைவாடி, சித்தம்பலம் புதுார், எஸ்.கணபதிபாளையம், சூரிபாளையம், எரிசனம்பட்டி, கணக்கம்பாளையம், சின்னக்காம்பட்டி உள்ளிட்ட, 45 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படாமல் உள்ளன.