கால்நடை மருத்துவ கல்லுாரியில் பால் பதப்படுத்தும் பயிற்சி முகாம்
உடுமலை; உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பால் மற்றும் பால் பொருட்களை பதப்படுத்தும் உதவியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால், 'வெற்றி நிச்சயம்', என்ற தொழில் முனைவோருக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பால் மற்றும் பால் பொருட்களை பதப்படுத்தும் உதவியாளர்களுக்கு உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 25 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி முகாம் துவக்க விழா கல்லுாரியின் கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்ப துறையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிவண்ணன் பயிற்சியை துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.