உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கனிம வளக்கொள்ளை; அபராதம் விதிக்க தயக்கம் ஏன்? குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

கனிம வளக்கொள்ளை; அபராதம் விதிக்க தயக்கம் ஏன்? குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

உடுமலை; ''மடத்துக்குளத்தில் சட்ட விரோதமாக கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்ட குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், அதிகாரிகள் குழு கூட்டு புலத்தணிக்கை மேற்கொண்டு, அபராதம் விதிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன்,'' என உடுமலையில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள மடத்துக்குளம் மைவாடியில், ஏராளமான கல்குவாரிகள், கிரஷர் தொழிற்சாலைகள் உள்ளன.இங்கு சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதோடு, விதி மீறல்கள் ஏராளமான நடப்பதாக, விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து விவசாயி ஜெகநாதசாமி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மைவாடியிலுள்ள கருப்புச்சாமி, உமாதேவி குவாரிகளில், வருவாய்த்துறை, கனிம வளத்துறை, சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு கூட்டு புலத்தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.அதன் அடிப்படையில், டிரோன் வாயிலாக அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, கருப்புச்சாமி குவாரியில், 29,130 கன மீட்டர் கிராவல், 3 லட்சத்து, 21 ஆயிரத்து, 858 கன மீட்டர் சாதாரண கற்களும், அனுமதி பெறாத பகுதியில், 7,680 கன மீட்டர் கிராவல், 59,708 கன மீட்டர் கற்கள் வெட்டி எடுத்துள்ளதாக அறிக்கை அனுப்பினர்.அதே போல், உமாதேவி குவாரியில், சட்ட விரோமாக, 9,776 கன மீட்டர் கிராவல், 95,051 கன மீட்டர் சாதாரண கற்கள் வெட்டி எடுத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் உடுமலை கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பினர்.ஒரு மாதத்திற்குள் அபராதம் விதிக்க நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், மூன்று மாதமாகியும் அதிகாரிகள் அபராதம் விதிக்க தயக்கம் காட்டி வருவதாக, உடுமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.விவசாயிகள் பேசியதாவது: அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமங்கள் வெட்டி எடுத்தால், குறைந்த பட்சம் கன மீட்டருக்கு, ரூ.90ம், அனுமதிக்கப்படாத இடத்தில் வெட்டி எடுத்திருந்தால், 15 மடங்கு அபராதம் விதிக்க வழி உள்ளது.இதன் அடிப்படையில், ஒரு குவாரிக்கு, ரூ.56 கோடியும், மற்றொரு குவாரிக்கு, ரூ.14.5 கோடியும் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், உரிமையாளர்களுக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்.இவ்வாறு, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி வரும் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல், பாசன கால்வாய் அருகில் கிணறு வெட்டி, சட்ட விரோதமாக பி.ஏ.பி.,பாசன நீரும் திருடப்பட்டு, கிரசர் தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.கனிம வளக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன், என விவசாயிகள் ஆக்ரோஷமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.பதில் அளித்த கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் அருணா,'' உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை