கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை; வேளாண் பல்கலை., அறிவுரை
உடுமலை; வெப்பம் அதிகரித்துள்ளதால், கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலவையை அடர் தீவனத்துடன் கலந்து கொடுக்க, வேளாண் பல்கலை., அறிவுறுத்தியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியில், பால் உற்பத்திக்காகவும், இதர தேவைக்காகவும் அதிகளவு கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது.அதிகரித்துள்ள வெப்ப நிலை காரணமாக கால்நடை வளர்ப்பில், கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.இந்த சீசனில், கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் பல்கலை., அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, வெப்பநிலை உயர்வாக உள்ளதால், கறவை மாடுகளுக்கு, நாளொன்றுக்கு, 50 கிராம் தாது உப்பு கலவையை, அடர் தீவனத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். சுத்தமான குடிநீரை போதியளவு வழங்குவது அவசியம்.பகல் வெப்பநிலை மற்றும் காலை நேர காற்றின், ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும், கால்நடைகளுக்கு வரக்கூடிய, சப்பை நோயை கட்டுப்படுத்த, தடுப்பூசி போட, கிராம கால்நடை மருத்துவரை, அணுக வேண்டும்.மேலும், கால்நடைகளுக்கு, ஏற்படும் வெப்ப அயற்சியினை போக்க, போதிய குடிநீர் வசதி செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.