உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்காணிப்பு குளறுபடி; பி.ஏ.பி., நீர் குறைகிறது; விவசாயிகள் குமுறல்

கண்காணிப்பு குளறுபடி; பி.ஏ.பி., நீர் குறைகிறது; விவசாயிகள் குமுறல்

திருப்பூர்; மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். விவசாயிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

நெல் கொள்முதல் மையம்

பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: அலங்கி யம், தளவாய்ப்பட்டினம், தாராபுரம், சத்திரம் பகுதிகளில், முன்கூட்டியே நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும். இம்மாத இறுதியில் கொள்முதலை துவக்க வேண்டும்.ரத்தினம், தாராபுரம்: டாஸ்மாக் கடை வாயிலாக அதிக வருமானம் ஈட்ட முனைப்பு காட்டும் அரசு, பால் உற்பத்தியாளருக்கு, லிட்டருக்கு 50 ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும்.கூட்டுறவு சங்கங்கள் நலிந்தால் ஆவின் இருக்காது; சங்கங்களை மேம்படுத்த வேண்டும். அமராவதி ஆற்று உபரிநீரை கொண்டு, சுற்றுப்பகுதியில் உள்ள, குளம், குட்டைகளை நிரப்ப ஆவன செய்ய வேண்டும்.

தண்ணீர் திருட்டு

ஞானபிரகாசம், குடிமங்கலம்: குடிமங்கலம் சுற்றுப்பகுதியில், தென்னை வாடல் நோய்க்கு நிவாரணம் கிடைக்கவில்லை. கூட்டுறவு சங்கத்துக்கு செயலாளர் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அரசூர் அருகே, பி.ஏ.பி., தண்ணீர் அதிகம் திருடப்படுகிறது. கூட்டுறவு கடன் சங்கத்தில், இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி:ஹிந்துசமய அறநிலையத்துறை முடக்கிய சொத்தின் உரிமையாளருக்கு பட்டா வழங்க வேண்டும். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு, மீண்டும் தண்ணீர் கொடுக்க வேண்டும். முத்தம்பாளையம், தெற்கு சாணார்பாளையம் பகுதி குளம், குட்டைக்கு தண்ணீர் ஒதுக்க வேண்டும்.திருஞானசம்பந்தம், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்:கோவை மாவட்ட கழிவுநீர் நொய்யலில் வருவதாலும், பல்வேறு ஆலைகளின் கழிவு கலப்பதாலும் நொய்யல் நீர் மாசுபட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், ஆண் டுக்கு ஆண்டு புற்றுநோய் பாதிப்பு அதிகமாகியிருக்கிறது. கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து, நொய்யலில் விட வேண்டும்.

காட்டுப்பன்றி தொல்லை

மவுனகுருசாமி, உடுமலை: தென்னையை தாக்கும் பூச்சிநோய் தாக்குதலை கட்டுப்படுத்த, அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். ஓராண்டுக்கு மேலாகியும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த இயலவில்லை.சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி முகிலன்: அரசு அலுவலர்கள், சமூக பணியை செய்யும்தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கனிமவள அதிகாரிகள், கல்குவாரிகளில் நடக்கும் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும். பாதுகாப்பு நலன்கருதி, சமூக ஆர்வலர்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டும்.பி.ஏ.பி., பாசன பாதுகாப்பு சங்க நிர்வாகி முத்துசாமி கூறுகையில், 'பி.ஏ.பி., திட்ட கண்காணிப்பு சரியில்லாததால், ஆண்டுக்கு ஆண்டு தண்ணீர் குறை கிறது. 18 நாள் முதல், 21 நாள் இடைவெளியில் கிடைத்த சுற்று தண்ணீர், தற்போது 30 நாட்களாகிவிடுகிறது. நீர்மேலாண்மையை சீரமைக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை