மழை இல்லாமல் கருகும் மானாவாரி பயிர்கள்
உடுமலை : உடுமலை பகுதியில், கோடை மழை போதியளவு பெய்யாததால், மானாவாரி பயிர்கள் பாதித்து விவசாயிகள் கவலையில் உள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கோடை கால மழையை ஆதாரமாகக்கொண்டு, பல ஆயிரம் ஏக்கரில், மானாவாரி சாகுபடிக்கு, விதைப்பு செய்தனர். குறிப்பாக, கால்நடைகளின் தீவனத்தேவைக்காக, சோளம், மக்காச்சோளம், கம்பு உட்பட சாகுபடிகளுக்கு, பருவமழை துவங்கும் முன், விதைப்பு செய்கின்றனர்.இதில், தானியங்கள் விளைச்சல் குறைவாக இருந்தாலும், கால்நடைகளின் உலர் தீவன தேவைக்காக, பயிர்களின் தட்டு பயன்படுகிறது.ஆனால், நடப்பாண்டு, விதைப்புக்கு பிறகு பயிரின் வளர்ச்சி தருணத்தில், மழை பெய்யவில்லை; மானாவாரி பயிர்களின் வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. சில இடங்களில், போதிய மழையின்றி, பயிர்கள் கருகி வருகிறது.விவசாயிகள் கூறுகையில், 'மானாவாரி சாகுபடியில், பல ஆண்டுகளாக போதியளவு விளைச்சல் கிடைக்கவில்லை. பருவமழைப்பொழிவு குறைந்துள்ளது முக்கிய காரணமாகும். நடப்பாண்டு, கால்நடைகளின் உலர் தீவன தேவைக்கு கூட சோளம் உட்பட பயிர்களின் வளர்ச்சி இல்லை,' என்றனர்.