உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய வர்த்தக வாய்ப்புகளுக்காக கண்காட்சிகள் அதிகம் தேவை

புதிய வர்த்தக வாய்ப்புகளுக்காக கண்காட்சிகள் அதிகம் தேவை

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம், மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்: அமெரிக்காவின் அதிகபட்ச வரி விதிப்பு காரணமாக, திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும். வங்கதேசம், பாகிஸ்தான், வியட்நாம், கம்போடியா போன்ற போட்டி நாடுகளுக்கு வாய்ப்பாகவும் அமைந்துவிடும். திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், தொழிலாளரும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. தமிழக தொழில்துறையில் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழங்கிய ஆர்டரை அனுப்ப வேண்டாமென தெரிவித்துள்ள வர்த்தகர்கள், வரி சீரமைக்கப்பட்ட பிறகு அனுப்பலாம் என்கின்றனர். திருப்பூரின் பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொடர்ந்து வர்த்தக வாய்ப்புகளை பெற, புதிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்கள், வங்கிக்கடனை திருப்பி செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். வங்கி கடன் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும். வட்டி சமன்படுத்தும் திட்டத்தில், மத்திய அரசு வழங்கி வரும், 2.50 சதவீதம் ஊக்கத்தொகையை, 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். புதிய வர்த்தக வாய்ப்புகளை பெற, ஜவுளி கண்காட்சியை அதிகம் நடத்த வேண்டும். வெளிநாட்டு கண்காட்சிகளில் பங்கேற்று ஆர்டர்களை பெற, மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாக ஓராண்டாவது ஆகும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து தொழில்துறையினரை காக்கவும், தொழிலாளர் வேலையிழப்பை தவிர்க்கவும், மத்திய, மாநில அரசுகள் புதிய நிதிக்கொள்கையை உருவாக்க வேண்டும்; ஜவுளித்தொழில் நலன்காக்கும் வகையில், புதிய வாரியம் உருவாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !