உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாய் மண்ணே... வணக்கம்! வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்

தாய் மண்ணே... வணக்கம்! வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், குடியரசு தின விழா நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பாக பணிபுரிந்த மாநகர, மாவட்ட போலீசார் 58 பேருக்கு முதல்வர் பதக்கம்; 106 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

மூவர்ண முத்தாய்ப்பு

திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், 76வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் கிறிஸ்துராஜ், தேசியக்கொடி ஏற்றினார். பேண்டு வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைக்க, கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.ஆயுதப்படை எஸ்.ஐ., மகேந்திரன், கமாண்டராக வாள் ஏந்தி வந்து, படையினரை பார்வையிட, கலெக்டருக்கு அழைப்புவிடுத்தார். மலர் அலங்காரம் செய்யப்பட்ட திறந்த ஜீப்பில், கலெக்டர் மற்றும் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் ஆகியோர், போலீஸ், என்.சி.சி., படையை பார்வையிட்டு, கொடிமேடை திரும்பினர். துப்பாக்கி ஏந்தியபடி, போலீசார் கம்பீர அணிவகுப்பு நடத்தினர்.எஸ்.ஐ., ரஞ்சித்குமார் தலைமையில் முதல்படை; கவிப்பிரியா தலை மையில் இரண்டாம் படை; குகன் தலைமையில் மூன் றாம் படைப்பிரிவினர்; ஊர் காவல் படை ரஞ்சித்குமார் தலைமையில் பேண்டு வாத்திய குழு வினர்; சண்முகசுந்தரம்தலைமையில் ஊர்க்காவல் படை; நிலைய அலுவலர் கார்த்திகேசன் தலைமையில் தீயணைப்பு துறையி னர்; வாசுதேவன் தலைமையில் டிராபிக் வார்டன் குழுவை தொடர்ந்து, என்.சி.சி., மாணவர்கள் அணிவகுத்துச்சென்றனர்.சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறா, மூவர்ண பலுான் பறக்கவிடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகி களின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.

நலத்திட்ட உதவிகள்

சிறப்பாக பணிபுரிந்த மாநகர போலீசார் 23 பேர்; மாவட்ட போலீசார் 35 பேர் என, 58 பேருக்கு முதலமைச்சர் பதக்கம்; போலீஸ் உள்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் என, 210 பேருக்கு பாராட்டுச்சான்று வழங்கப்பட்டது.குடியரசு தின விழாவின் ஒருபகுதியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், பால்வளம், வேளாண், தோட்டக்கலை, உணவு பொருள் வழங்கல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவு துறைகள் சார்பில், 106 பயனாளிகளுக்கு, மொத்தம் 1 கோடியே 68 லட்சத்து 37 ஆயிரத்து 875 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், தோட்டத்துபாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெயபிரியாவுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்; பல்லடத்தை சேர்ந்த பிரபுகுமாருக்கு பேட்டரி வீல்சேர் வழங்கப்பட்டது.டி.ஆர்.ஓ., கார்த்தி கேயன், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணைகமிஷனர் சுஜாதா, ராஜராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உள்பட அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

மாணவர்கள் அசத்தல்

குடியரசு தின விழாவின் நிறைவாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில்,அரசு, தனியார் பள்ளி மாணவ மாணவியர் 900 பேர் பங்கேற்று தேச பற்று பாடல்களுக்கு நடனமாடினர்.குமார் நகர் அரசு பள்ளி மாணவியர், தமிழகம், கேரளா, பஞ்சாப், அசாம் மாநில பாரம்பரிய ஆடைகள் அணிந்து ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடலுக்கு நடனமாடினர்.சேவூர் கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் சங்கே முழங்கு பாடலுக்கும்; ஜெய்வாபாய் பள்ளி மாணவியர் மணப்பாறை மாடு கட்டி ரீமிக்ஸ் பாடலுக்கும்; அங்கேரிபாளையம் கொங்கு வேளாளர் பள்ளி மாணவர்கள், தீரன் சின்னமலையின் புகழ்பாடும் பாடலுக்கும் நடனமாடினர்.டீ பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர் மஞ்சள், இளஞ்சிவப்பு, பச்சை என பல வண்ண துணிகளை வெவ்வேறு விதமாக கோர்த்தும்; மயில், தாமரை, புலி வேடத்தில் வந்தும்; பசுமை குடை கொண்டுவந்து, இசைக்கேற்ப நடனமாடி அசத்தினர்; நடனத்தின் நிறைவில், 'ஹேப்பி ரீபப்ளிக் டே'; 'ஜெய்ஹிந்த்' ஆகிய ஆங்கில வாசகங்களை உருவாக்கி நின்றனர்.அய்யன்காளிபாளையம் வி.கே., அரசு பள்ளி மாணவ, மாணவியர், சிலம்பத்துடன் தேசபற்று பாடலுக்கு நடனமாடினர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ