மலையேற்றம் பந்தயம் கிடையாது
சுற்றுலாவை விரும்பாத எவரும், மலையேற்றத்தை விரும்பாமல் இருக்க முடியாது. மலை உச்சியில் உள்ள ஆன்மிக தலம் துவங்கி இயற்கை சூழலுடன் கூடிய மலைகள் வரை, சவால் நிறைந்த பாதையில் சளைக்காமல் நடந்து செல்வதை, பலர் தங்கள் பொழுதுபோக்காகவே கொண்டுள்ளனர்.இருப்பினும், சில நேரங்களில் ஆர்வக் கோளாறு காரணமாகவும், உடல், மன ரீதியான தயாரிப்பு இல்லாமலும் மலையேற்றப் பயணம் மேற்கொள்ளும் போது, அது, மூச்சுத்திணறல், மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், சில நேரங்களில் உயிரிழப்பையும் கூட ஏற்படுத்தி விடுகிறது. கோவை மாவட்டம், பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், இந்தாண்டு சீசனில், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதே இதற்கு சான்று; இனிவரும் காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. உடல் தகுதி முக்கியம்
மலையேற்ற வழிகாட்டி, கும்பகோணத்தை சேர்ந்த ஜெயசீலன் கூறியதாவது:ஹிமாசலப் பிரதேசத்தில் மலையேற்ற பயணத்தை அதிகளவில் மேற்கொள்ள வழிகாட்டுதல் வழங்கி வருகிறோம். மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கு முன், உடல் தகுதி மிக முக்கியம். மலையேற்றம் செல்வதற்கு ஒரு வாரம் முன், பிடித்த உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது நல்லது. நீச்சல், ஜூம்பா, யோகா போன்ற பயிற்சிகளில், தங்களுக்கு பிடித்த பயிற்சியை, தினசரி செய்வது நல்லது. கவலை வேண்டாம்
மலையேற்றத்துக்கு, உடல் ஆரோக்கியம், ஆற்றல் முக்கியம். சரியான நேரத்துக்கு உணவெடுக்க வேண்டும். தேவைக்கேற்ப நீர் பருகுவது, மிக முக்கியம்; சரியான வழிகாட்டியுடன் மலையேற்றம் செல்வதும் அவசியம். முதன் முறை, மலையேற்றம் செல்லும் போது, ஒரு அச்ச உணர்வு ஏற்படலாம்; அதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.இது பந்தயம் கிடையாது; நம் விருப்பத்திற்கேற்ற ஒரு செயல்பாடு தான். தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வாக்கிங், ஜாகிங் போன்ற பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. உடற்பயிற்சி செய்யும் நேரம், உணவருந்தும் நேரம் உள்ளிட்ட விஷயங்களை 'அலாரம்' செய்து வைத்துக் கொள்வது நல்லது.