விதி மீறி செயல்படும் தனியார் மதுக்கூடம் அகற்ற நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
உடுமலை: உடுமலையில், விதி மீறி செயல்பட்டு வரும் தனியார் மதுபானக்கூடத்தை அகற்ற வேண்டும், என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடுமலை நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் மத்தீன் தலைமை வகித்தார். இதில், தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க., - த.மு.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானம்: உடுமலை கொழுமம் ரோட்டில், ரயில்வே கேட் பகுதியில், கிரீன் டைமண்ட் என்ற பெயரில் தனியார் மதுபானக்கூடம் உள்ளது. மகளிர் கல்லுாரி, பெண்கள் பள்ளி, தனியார் பள்ளிகளில் பயிலும் நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர், கொழுமம், குமரலிங்கம், நெய்க்காரபட்டி உள்ளிட்ட வழித்தடங்களிலுள்ள கிராமங்களைச்சேர்ந்த மாணவர்கள், இப்பகுதியில் பஸ்களுக்கு ஏறி, இறங்கி வருகின்றனர். ரயில்வே வழித்தடமும் அமைந்துள்ளதால், கேட் மூடப்படும் சமயத்தில், ஏராளமான மக்களும் காத்திருக்கின்றனர். விதி மீறி, ரயில்வே கேட், பஸ் ஸ்டாப்பிலிருந்து, 5 மீட்டர் துாரத்தில் மதுபானக்கூடம் அமைந்துள்ளது. இதனால், அரைநிர்வாணமாக உலா வரும் போதை ஆசாமிகளால், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். ரயில்வே கேட் மற்றும் ரயில்களில் அத்துமீறுவதோடு, வாகன விபத்துக்குளும் அதிகரிக்கிறது. அதே போல், தனியார் மதுக்கூடத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும், என்ற விதி உள்ள நிலையில், பொதுமக்களுக்கும் மது விற்பனை செய்யப்படுகிறது. எனவே, விதி மீறி அமைக்கப்பட்டுள்ள இந்த தனியார் மதுக்கூடத்தை அகற்ற வேண்டும், என தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சியில் அனுமதி பெறவில்லை; தனியார் மதுக்கூடம் செயல்படும் கட்டடம், குடியிருப்பு என பதிவு செய்து, வீட்டு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வணிக ரீதியாகவும், மதுக்கூடமாகவும் செயல்பட அனுமதியில்லை. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்தனர்.