அ விநாசி, பூண்டி, திருப்பூர் ஆகியவை நல்லாறு நதிக்கரையின் முகவரி. விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சிய நல்லாறு, நகரமயமாக்கலால் பெருகிய வீடுகள் மற்றும் தொழில்கூடங்களின் சுயநலத்தால் 'சுருங்கியது'. ஒரு காலத்தில், முகம் பார்க்கும் கண்ணாடியாய் ததும்பி நின்ற நன்னீர், இன்று, முகம் சுளிக்கும் சாக்கடையாய் உருமாறி கிடக்கிறது. நல்லாற்றை பாதுகாப்பது புண்ணிய காரியம் வெங்கடாசலம், உமையஞ் செட்டிபாளையம். நல்லாறு பாதுகாப்பு இயக்கம்: 'நல்லாற்று நீரில் பரிசல் உதவியுடன் தான் எதிர்முனை செல்வோம்,' என, என் உறவினர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். நல்லாறு கரையோரம் உள்ள பல கிராம மக்கள், நல்லாற்று நீரை பயன்படுத்தி தான் விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். நல்லாற்றின் வழித்தடம் மட்டுமின்றி, அதன் வடிநிலப் பகுதியானது, கானுார், சேவூர், குரும்பபாளையம், சங்கமாங்குளம், தாமரைக்குளம் என பெரிய குளங்கள் வரை பரவியிருக்கிறது; நல்லாறு பாயும் அணைப்புதுார், ஒரு காலத்தில் வயக்காடு எனப்படும் வயல் நிறைந்த பகுதியாக இருந்திருக்கிறது. ஆறு, நதிகளை ஒட்டிய பள்ளத்தில் மயானம் அமைத்து, இறந்தவர்களை அடக்கம் செய்து, ஆற்று நீரில் குளித்து செல்வதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பூண்டி, அம்மாபாளையம், ராக்கியாபாளையம், அணைப்புதுார் உள்ளிட்ட இடங்களில் அத்தகைய மயானங்கள் உள்ளன. தற்போது மின்மயான பயன்பாடு அதிகரித்து விட்டதால், நதிக்கரை மயானங்களின் பயன்பாடு குறைந்திருக்கிறது; இதனால், அவை பராமரிப்பின்றி, சுகாதாரம் குன்றி படுமோசமான நிலையில் உள்ளன. காலப்போக்கில் தொழிற்சாலை, மருத்துவமனை, வர்த்தக நிறுவனங்களின் கழிவுநீர், நேரடியாக நல்லாற்றில் கலக்க விடப்படுகிறது. நன்னீர் பாய்ந்த நதிக்குள், 'சைட்' அமைத்து, விற்பனை செய்தவர்களை விரட்டியடித்த சம்பவம் கூட, கடந்த, 10 ஆண்டுக்கு முன் நடத்திருக்கிறது. தற்போதும் கூட, நல்லாற்று கரையை ஆக்கிரமிக்கும் செயல் தொடர்கிறது. அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டியில் உள்ள ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிக்கழிவுகள், நல்லாற்று கரையில் தான் கொட்டப்படுகின்றன. சமீப ஆண்டுகளாக, இயற்கையின் மீது, மக்கள் பேரன்பு காட்ட துவங்கியிருக்கின்றனர். அது, நல்லாறு பாதுகாப்பு சார்ந்தும் இருக்கிறது. நல்லாறு போன்ற நீராதாரங்களை பாதுகாப்பதை விட வேறெந்த புனிதத்தையும் உருவாக்கிவிட முடியாது. 'நல்ல ஆறு' நன்றாக இல்லை ஆனந்தி, கருவலுார். அத்திக் கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் (மகளிர் குழு): நல்லாற்றின் மேற்கே கஞ்சப்பள்ளி, செங்காளிபாளையம், கிருஷ்ணாபுரம், ராமநாதபுரம், அனந்தகிரி, நம்பியாம்பாளையம், சுண்டக்காம்பாளையம், வெள்ளியம்பாளையம், அவிநாசி தாமரைக்குளம் வழியே பணிக்கும் நல்லாறு, நொய்யலின் கிளை நதி. இந்த நதிக்கரை ஓரமுள்ள வீடுகள், ஓட்டல், வணிக நிறுவனங்களில் வெளியேறும் கழிவுகள், இந்த ஆற்றில் நேரடியாக கலக்கவிடப்படுகின்றன; குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இது, நம் வாழ்வாதாரம் காத்த, தலைமுறைகளை உருவாக்க உதவிய 'நல்ல ஆறு' என்பதை மக்கள் மறந்து போய், குப்பை கொட்டும் பள்ளமாகவே பார்க்க துவங்கியிருக்கின்றனர். முதலில், ஆற்றில் குப்பை கழிவு கொட்டப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். நதியின் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். அப்போது தான் அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒரு ஆறு இருந்தது என்பது தெரியும். நாளை... கழிவுநீர் சுத்திகரிக்கும் திட்டம் அறிக்கையுடன் நின்றது ஏனோ?