தேசிய அளவிலான ஸ்கேட்டிங் பல்லடம் மாணவியர் அபாரம்
பல்லடம்: மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், 63வது தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தன. இதில், தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட, 29 மாநிலங்களில் இருந்து, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனையர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து பல்வேறு வீரர்கள் பங்கேற்ற நிலையில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். அதில், சூலுார் கேந்திரிய வித்யாலயா மாணவி அனுஸ்ரீ 600 மீ., பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 200 மீ., பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி அக் ஷிதா; திருப்பூர் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளி மாணவி அபர்ணா ஆகியோர், 1,000 மீ., பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை, பல்லடம் வெலாசிட்டி ஸ்கேட்டிங் கிளப் பயிற்சியாளர்கள் காமராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.