உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வில் அம்பு சேவையுடன் நவராத்திரி விழா நிறைவு

வில் அம்பு சேவையுடன் நவராத்திரி விழா நிறைவு

திருப்பூர்:திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் நடந்துவந்த நவராத்திரி விழா, அரக்கனை வதம் செய்யும் வில் அம்பு சேவையுடன் நிறைவு பெற்றது. நவராத்திரி விழாவில், கோவில் மற்றும் வீடுகளில், கொலு வைத்து, ஒன்பது நாட்கள் கூட்டு வழிபாடு நடக்கிறது. பத்தாவது நாளான விஜயதசமியில், அரக்கனை வதம் செய்ததை நினைவு கூரும் வகையில், கோவில்களில் வில் அம்பு சேவை நடத்தப்படுகிறது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று முன்தினம், வில்அம்பு சேவை நடந்தது. வன்னிமர இலைகளால் பந்தல் அமைத்து, அதற்குள் வாழை மரத்தை கட்டி வைத்து, சிவாச்சாரியார்கள் வில், அம்புடன் வேடம் தரித்து வந்து, வாழை மரத்தின் மீது அம்பு செலுத்தி, தீபாராதனை செய்தனர். அதனை தொடர்ந்து, வெள்ளை குதிரை வாகனத்தில், சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்துடன், திருவீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், நேற்று மாலை, வில் அம்பு சேவை மற்றும் பூஜைகள் நடந்தது; இதேபோல், நவராத்திரி வழிபாடு நடந்து வந்த கோவில்களில் வில் அம்பு சேவையுடன், விழா நிறைவடைந்தது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ