பசுந்தாள் உர விதை வேண்டுமா? வேளாண்துறையை அணுகலாம்
உடுமலை; மடத்துக்குளம் வட்டார விவசாயிகளுக்கு, பசுந்தாள் உரப்பயிரான தக்கை பூண்டு விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது: சாகுபடி நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டு, அவற்றை பூக்கும் தருணத்தில், நிலத்தில் மடக்கி உழுவதால், மண்ணின் நீர்ப்பிடிப்பு தன்மை, மண் அரிமானம் தடுக்கப்பட்டு, மண் வளம் அதிகரிக்கிறது. மண்ணின் களர் தன்மையை சரி செய்ய உதவுகிறது. மேலும், மண்ணிலுள்ள அங்கக சத்துக்கள், கார்பன் சத்து அதிகரிக்க செய்கிறது. இதனால், பயிருக்கு, உரப்பயன்பாடு, நீர்ப்பயன்பாடு அதிகரித்து, பயிர் செழித்து வளரவும், அதிக மகசூல் கிடைக்கவும் வழி செய்கிறது. சாகுபடிக்கு பயனுள்ள பசுந்தாள் உரப்பயிரான தக்கை பூண்டு விதைகள், தற்போது மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க, வேளாண் விற்பனை மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், சிட்டா, ஆதார் நகலுடன் வேளாண் மையத்தை அணுகலாம். ஒரு விவசாயிக்கு, அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ விதைகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 70101 57948 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தார். அப்பகுதி விவசாயிகள் மானிய விலையில் இவற்றை வாங்கி பயன்பெறலாம்.