சினிமாக்கு பாட்டெழுதணும்... ஒரு கவிஞனின் செல்லுலாய்ட் கனவு!
''எனக்கு சினிமாவுக்கு பாட்டெழுதணும்னு ரொம்ப ஆசை; அதுதான் என் வாழ்நாள் கனவும் கூட. அதுக்கு ஏத்த மாதிரி வாய்ப்பும் வந்துச்சு. 'நீங்க எழுதற பாட்டுக்கு காசு தர்றோம்; ஆனா, உங்க பேரை போட மாட்டோம்'ன்னு சொன்னாங்க. எனக்கு காசு முக்கியமில்ல; என் பேரு வெளிய தெரியணும்; தமிழ் சினிமாவுல நானும் ஒரு பாடலாசிரியர்ன்னு பேரு வாங்கணும்ங்றது தான் ஆசைன்னு சொல்லிட்டு, திரும்பி வந்துட்டேன். இருந்தாலும், விடாமல் முயற்சி செய்துட்டே இருக்கேன். ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும்,'' என நம்பிக்கை தளராமல் சொல்கிறார், பல்லடம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த கணேசன். 40 வயது நிரம்பிய இவர், பார்மஸி வைத்துள்ளார்.கவிதை, கதை, கட்டுரை என, இதுவரை, 16 புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஐந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். 'கரோக்கி' இசை வடிவில், இதுவரை, 300 பாடல் எழுதி, ஆல்பமாக வெளியிட்டிருக்கிறார். தன் சொந்த ஊரான தென்காசியின் அருமை பெருமை, திருப்பூரின் தொழில், வட மாநிலத்தவர் ஆதிக்கம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த பணி, மாணவ, மாணவியர் நலன் உட்பட அன்றாட நாட்டு நடப்பு மற்றும் மக்கள் தினசரி எதிர்கொள்ளும் யதார்த்தமான விஷயங்களை, பாமர மக்களும் எளிதில் புரிந்துக் கொள்ளும் வார்த்தைகளில் பாடலாக வடித்து, இசை வடிவில் வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில், 'பல்லடம் கீதம்' என்ற பெயரில் ஆல்பம் வெளியிட்டு, தான் வாழும் ஊரை பெருமைப்படுத்தி உள்ளார். பல்வேறு அமைப்பினர் வழங்கிய, 120க்கும் மேற்பட்ட விருதுகளை அலமாரியில் அடுக்கி வைத்திருக்கிறார்தனது இலக்கிய, இசைப்பயணம் குறித்து கணேசன் கூறுகையில், ''இதுவரை நான் எழுதிய புத்தகங்களை விலைக்கு விற்றதே இல்லை. இலவசமாக தான் வழங்கியிருக்கிறேன். சமூகவலை தள பக்கத்தின் முகப்பில் கூட, 'பணம் வாங்காத பாடலாசிரியர்' என்ற வரியை தான் எழுதியுள்ளேன். சினிமாவுக்கு பாடல் எழுத வேண்டும் என்பது தான் என் ஆசை. நான் தென்காசி மாவட்டம், ஊத்துமலை என்ற சிறிய கிராமத்தில் பிறந்தேன். நான் பாடலாசிரியராகி, 'எங்க ஊரு பாட்டுக்காரன்'ன்னு எங்க ஊரு மக்கள் பாராட்டணும்னு எனக்கு ஆசை. என் கனவு பலித்தால் மட்டுமே என் எழுதுகோல் இளைப்பாறும்,'' என்கிறார் தன்னம்பிக்கை ததும்பும் வார்த்தைகளுடன்...