உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசத்தின் மாவீரர் நேதாஜி

தேசத்தின் மாவீரர் நேதாஜி

கடந்த, 1897 ஜன., 23ல், பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். ஐ.சி.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற போஸ், லண்டனில் பணியாற்றினார். அப்போது தான் இந்தியாவில் ஜாலியன் வாலாபாக் படுகொலை அரங்கேற, அவருக்குள் அது, விடுதலை வேட்கையைத் துாண்டிவிட்டது. 1921 ஏப்., மாதம் தன் பதவியை ராஜினாமா செய்து இந்தியா திரும்பினார் என்பது வரலாறு.சித்தரஞ்சன் தாஸ் தான், இவரது குரு. அவரது வழிகாட்டுதலில், காங்கிரஸில் இணைந்தார். 'ஸ்வராஜ்' என்ற பத்திரிகையிலும் பணியாற்றினார். ''குருதியைக் கொடுங்கள், உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்'' என்ற இவரது அறைகூவல் தான், இளைஞர்கள் பலரை சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க செய்தது. 1938ல், காங்., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாகவி ரவீந்திரநாத் தாகூர், அவருக்கு பாராட்டு விழா நடத்தி, 'நேதாஜி' என்ற பட்டம் வழங்கினார்; 'மரியாதைக்குரிய தலைவர்' என்பதே அதன் அர்த்தம்.ஒரு கட்டத்தில், அவர் காங்கிரஸில் இருந்து விலக நேரிட்டது. 'பார்வர்டு பிளாக்' என்ற புதிய கட்சியை உருவாக்கினார். 1941ல், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அதற்கு தலைமையேற்றார். சிறு வயதிலிருந்தே, அவருக்கு ராணுவ வாழ்க்கையில் ஆசை இருந்தது. அவர் தனது வாழ்க்கையின் கடைசி சில ஆண்டுகளை ராணுவ சீருடையில் கழித்தார். இந்திய விடுதலைக்கு அளப்பரிய பல விஷயங்களை செய்ததில், அவரது பங்களிப்பு மகத்தானது. அவர், கடந்த, 1945, ஆக., 18 ம் தேதி விமான விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. அவரது, இறப்பு இதுவரை அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நாட்டின் சுதந்திரத்தை உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். இன்றைக்கு அவர் குறித்து பலருக்கு முழுமையாக தெரிவதில்லை. அவரது பிறந்த நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் அவர் குறித்து மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் இதற்காக நேரங்களை ஒதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர் குறித்து தெரியும் போது, ராணுவத்தில் சேர்வது குறித்து இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படும். அன்றைக்கு, சுபாஷ் சந்திர போஸ் குறித்து அறிந்த, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பலரையும் ராணுவத்துக்கு சேர தமிழகத்தில் இருந்து முன்னெடுப்பு மேற்கொண்டார். ஆங்கிலேயர் காலத்தில் இந்திய ஆட்சி பணியை முடித்து விட்டு, அவர்களிடத்தில் வேலை செய்யாமல், நாட்டின் சுதந்திரத்துக்கு பெரும்பாடு பட்டவர். இன்றைக்கு பலருக்கும் சிலை வைத்து வருகின்றனர். இவரை போன்று, வாழ்வை முழுவதுமே, நாட்டுக்காக அர்ப்பணித்தவருக்கு திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சிலை நிறுவன வேண்டும். - மோகனசுந்தரம், பொருளாளர், திருப்பூர் ப்ரேரணா அறக்கட்டளை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை