புதிய பாரதம் எழுத்தறிவு தேர்வு ; 19 ஆயிரம் பேர் பங்கேற்றனர்
திருப்பூர்; எழுத, படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம், 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களில், கற்போர் எழுத்தறிவு மையம் உருவாக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மூலம் கற்பித்தல், கற்றல் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்தாண்டு பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு நேற்று மாநிலம் முழுதும் தேர்வு நடந்தது.திருப்பூர் மாவட்டத்தில், 1,119 மையங்களில், 19 ஆயிரத்து, 18 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து தசநாயக்கன்பட்டி, மணக்கடவு துவக்கப் பள்ளியிலும், மாவட்ட உதவி திட்ட அலுவலர் (புதிய பாரத எழுத்தறிவு திட்டம்) அண்ணாதுரை தென்னம்பாளையம், பலவஞ்சிபாளையம், வீரபாண்டி பள்ளியிலும் ஆய்வு செய்தனர்.துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக அலுவலர்கள் தேர்வை ஒருங்கிணைந்து நடத்தினர்.