அவிநாசி அரசு கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு துவக்கம்
அவிநாசி; அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நடப்புக் கல்வியாண்டில், பி.சி.ஏ., புதிய பாடப் பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளது.அவிநாசி அரசு கலைக்கல்லுாரியில் இணைந்து பயில, மாணவ, மாணவியர் மத்தியில் ஆண்டுக்காண்டு ஆர்வம் அதிகரிக்கிறது. 5 ஆண்டுக்கு முன் துவங்கப்பட்ட கல்லுாரியாக இருப்பினும், அனைத்து பாடப்பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை முழுமைப் பெறுகிறது. ஏழை, நடுத்தர வர்க்க மாணவ, மாணவியர் அதிகளவில் பயில்கின்றனர்.கல்லுாரியில் ஏற்கனவே, பி.ஏ., ஆங்கிலம் மற்றும் பொருளியல்; பி.எஸ்.சி., வேதியியல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல்; பி.காம்., மற்றும் பி.காம்., கம்ப்யூட்டர் அறிவியல், சர்வதேச வணிகம் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.பனியன் தொழில் நிறைந்த திருப்பூரில், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், எம்.ஏ., பொருளாதாரம் மற்றும் ஆங்கிலம், கூடுதலாக ஒரு பி.காம்., பாடப்பிரிவு, பேஷன் டிசைனிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை அனுமதிக்க வேண்டும் எனவும், தமிழ்த்துறையை உருவாக்க வேண்டும் எனவும், கல்லுாரி நிர்வாகத்தினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.நடப்பு கல்வியாண்டில், தற்போதுள்ள பாடப்பிரிவுகளுடன், பி.சி.ஏ., என்ற கம்ப்யூட்டர் சார்ந்த இளங்கலை பாடப்பிரிவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 'வரவேற்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய பாடப்பிரிவுகளை அனுமதித்து, கூடுதல் வகுப்பறைகளையும் ஏற்படுத்தினால், கல்லுாரி வளர்ச்சி மேம்படும்' என, உள்ளூர்வாசிகள் எதிர்பார்க்கின்றனர்.