சித்த மருத்துவமனைக்கு புதிய இடம் கைவிரிப்பு
திருப்பூர்: ''மாவட்ட அரசு சித்த மருத்துவமனைக்கு இடம் கொடுக்க வழியில்லை'' என்று மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையினர் மற்றும் 15 வேலம்பாளையம் மருத்துவமனையினர் கைவிரித்தனர். விரிவுபடுத்தப்பட்ட புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டும் பணி துவங்கியுள்ளதால், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே செயல்பட்டு வந்த மாவட்ட சித்த மருத்துவமனை அலுவலகம் மற்றும் சித்த மருத்துவமனையை இடம் மாற்ற கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட சித்த மருத்துவமனை இணை இயக்குனர் தரப்பில் இருந்து, பெரிச்சிபாளையம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் இடம் ஒதுக்கி தரும்படி கேட்கப்பட்டது. 'தற்போது இளங்கலை மருத்துவப்படிப்பு மாணவர் மட்டும் உள்ளனர்; வரும் காலத்தில் முதுகலை படிப்பு மாணவர் வருவர். ஏற்கனவே நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் இடப்பற்றாக்குறை உள்ளது. எனவே இடமில்லை,' என மருத்துவ கல்லுாரி டீன் தரப்பில் மறுத்து விட்டனர்.நடப்பாண்டு புதிதாக திறக்கப்பட்ட, 15 வேலம்பாளையம் மருத்துவமனையில், இடம் கேட்ட போது, அங்கும்கைவிரித்து விட்டனர். இதனால், சித்த மருத்துவமனை மற்றும் அலுவலகத்தை இடம் மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில்: சித்த மருத்துவ அலுவலகம்?: நோயாளிகள் வந்து செல்வதற்கு ஏற்ப இடம் வழங்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளோம். கோவை, திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகத்தை கலெக்டர் அலுவலகத்துக்கு மாற்ற ஒப்புதல் தர உள்ளனர். விரைவில் சித்த மருத்துவமனைக்கும் ஓரிடம் ஒதுக்கித்தரப்படும் என எதிர்பார்க்கிறோம். - கவிதா: மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்.: