புதிய பாதாள சாக்கடை திட்டம் மாநகராட்சியில் ரூ.800 கோடியில் அமைகிறது
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட வீரபாண்டி பகுதிக்கு 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான திட்ட வரைவுகளுடன் ஜெர்மனி வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.திருப்பூரில் பெருகி வரும் குடியிருப்புகள், அதிகரித்து வரும் மக்கள்தொகை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.வளர்ந்து வரும் குடியிருப்புகள், ஏற்கனவே மாநகராட்சி விரிவாக்கம் செய்த போது விடுபட்ட பகுதிகள் ஆகியவற்றில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் பிரச்னை மிகப் பெரிய சவாலாக நிர்வாகத்துக்கு இருந்து வருகிறது.திருப்பூரில் ஏற்கனவே ஒரு பாதாளச் சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மேலும் 2 திட்டங்கள் சோதனை ஓட்டம் முடிந்து, வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது. மேலும் ஒரு திட்டம் செயல்படுத்த முடிவு
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியாக உள்ள வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான முதல் கட்ட ஆலோசனை நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் தினேஷ்குமார், கமிஷனர் ராமமூர்த்தி, பொறியியல் மற்றும் நிர்வாகப் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இத்திட்டம் ஏறத்தாழ, 800 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.வீரபாண்டி சுற்றுப்பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு இணைப்பு வழங்கி, புதிய சுத்திகரிப்பு மையம் அமைத்தும், உரிய பம்பிங் மையம் ஆகியனவும் முற்றிலும் புதிதாக அமைக்க வேண்டும். இதற்காக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கே.எப்.டபிள்யூ,, வங்கி நிதி உதவி வழங்கவுள்ளது. வங்கி அதிகாரிகள் ரைனர், நார்பட் மற்றும் அர்ச்சனா ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஆலோசனை நடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன அதிகாரிகள் ஜஸ்டின், சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆலோசனைக் கூட்டத்தில், மாநகராட்சி பகுதியில் தற்போது பயன்பாட்டில் உள்ள மற்றும் நிறைவடையும் நிலையில் உள்ள பாதாள சாக்கடை திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.மேலும், அதிகரித்து வரும் தேவை அடிப்படையில், 2075ம் ஆண்டு வரை கணக்கிடப்பட்டு புதிய திட்டம் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.