பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை; மாணவர்கள், பயணியர் தவிப்பு
உடுமலை; உடுமலை கொழுமம் பிரிவு ரோடு பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை இல்லாமல் பயணியர் அவதிப்படுகின்றனர்.உடுமலை - கொழுமம் செல்லும் பிரிவு ரோட்டின் வழியாக, மடத்துக்குளம் செல்லும் பஸ்கள், கொழுமம் வழிதடத்தில் உள்ள கிராமங்களுக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு ரயில்வே கேட் அருகில் பஸ் ஸ்டாப் உள்ளது.அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவியர், குடியிருப்பு வாசிகள் இந்த பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர். இங்கு நிழற்கூரை வசதி இல்லை. இதனால் பயணிகள் திறந்த வெளியில் நின்று தான் காத்திருக்க வேண்டும்.நிழற்கூரைக்கான கட்டமைப்பு இல்லாததால், சில நேரங்களில் வாகனங்கள் பயணியர் காத்திருக்கும் இடம் வரை ஆக்கிரமித்து செல்கின்றன. அங்கு பயணிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனங்கள் செல்கின்றன.இரவு நேரங்களில், இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பள்ளி மாணவர்கள் இந்த பஸ் ஸ்டாப்பை அதிகம் பயன்படுத்துகின்றனர். மழை நாட்களில் மழையில் நனைந்தபடிதான் மாணவர்கள் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர்.பயணிகளுக்கான அடிப்படை தேவையாக, நிழற்கூரை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.