மின்வேலி அமைத்துள்ள விவசாயிகளுக்கு அறிவிப்பு
உடுமலை; வன எல்லை கிராமங்களில், மின் வேலிகள் அமைத்துள்ள விவசாயிகள் வனத்துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: வன எல்லை கிராமங்களில், திருப்பூர் வனக்கோட்டத்தில், தேவனுார் புதுார் துவங்கி, கொழுமம் வரை, விவசாயிகள் கம்பி வேலிகள், சோலார் மின் வேலிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட மின் வேலிகள் அமைத்துள்ளனர். ஒரு சிலர் அனுமதிக்கப்பட்ட அளவை விட, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் வேலிகள் அமைத்துள்ளனர். இவற்றால், மனிதர்களுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வனத்திலிருந்து, 5 கி.மீ., துாரம் வரை உள்ள விவசாய நிலங்களில், மின் வேலி அமைத்துள்ள விவசாயிகள் பதிவு மேற்கொள்ளப்பட்டு, வனத்துறை, மின் வாரிய அதிகாரிகளை கொண்ட குழு ஆய்வு செய்து, அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது, 174 விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், 10 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள விவசாயிகள், வனவர் உள்ளிட்ட வன ஊழியர்களிடம் உரிய விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும். உரிய அனுமதியில்லாமல் மின் வேலிகள் அமைக்க கூடாது. இவ்வாறு, தெரிவித்தனர்.