உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யல் குளங்கள் நிரம்பின

நொய்யல் குளங்கள் நிரம்பின

பருவமழை கைகொடுத்ததால், நொய்யல் ஆற்று வெள்ளத்தால், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தென்மேற்கு பருவத்தில் பெய்த மழை காரணமாக, நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; அதன் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, நொய்யல் வழியோர குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளன.மாவட்டத்தின் எல்லையில் உள்ள, சாமளாபுரம் குளம் நிறைந்து, உபரி நீர் பள்ளபாளையம் குளத் துக்கு சென்று, முழு கொள் ளளவை எட்டியுள்ளது. ஆண்டிபாளையத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் நிற்பதால், தென்மேற்கு பருவத்திலேயே, ஆடி 18 அன்று குளம் நிரம்பியது.மாணிக்காபுரம் குளம் மொத்தம், 120 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது; பாசன ஆயக்கட்டாகவும் இருந்துள்ளது. குளம், 80 சதவீதம் நிரம்பி விட்டதாகவும், ஒரு வாரத்துக்குள் முழுமையாக நிரம்பி விடும் என, அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.நொய்யலின் வடகரையில் உள்ள மண்ணரை மூளிக்குளம் மற்றும் அணைப்பாளையம் குளங்கள், முழு கொள்ளளவை எட்டியுள்ளன. நொய்யல் வெள்ளப்பெருக்கால், மாவட்டத்தின் கடைசி எல்லையில், நொய்யலின் தெற்கே உள்ள, கத்தாங்கண்ணி குளமும் முழுமையாக நிரம்பியுள்ளது.நொய்யல் ஆற்றில், நேரடி பாசன கட்டமைப்பு கிடையாது; மழைக்காலங்களில் வரும் வெள்ளத்தை தடுத்து, குளம், குட்டைகளில் நிரப்பி, ஆண்டு முழுவதும் விவசாயம் செய்து வருகின்றனர். நிலத்தடிநீர் செறிவூட்டலால், ஒட்டுமொத்த விவசாயிகளும் பயனடைந்து வருகின்றனர்.சாமளாபுரம் பேரூராட்சி, திருப்பூர் ஒன்றியத்தின் மூன்று ஊராட்சிகள், மாநகராட்சி மற்றும் ஊத்துக்குளி ஒன்றிய பகுதிகளுக்கு, நொய்யலை சார்ந்துள்ள, குளம், குட்டைகளே நிலத்தடி நீராதாரமாக இருக்கின்றன.மழைக்காலங்களில், ஓடைகளில் பெருக்கெடுக்கும் மழை தண்ணீரால் நிரம்பும் குளம், குட்டைகளால், கிராமப்புறங்களின் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது.புது வெள்ளம் தேக்க முயற்சிதிருப்பூர் மாவட்டம் முழுவதும், இயல்பான மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டது. தற்போது, வடகிழக்கு பருவத்தில், பெரும்பாலான குளங்கள் நிரம்பிவிட்டன. அக்., மாதம் இரண்டாவது வாரம் பெய்த மழையை பயன்படுத்தி, மானாவாரி சாகுபடியை துவக்கிவிட்டோம். சோளம் மற்றும் பயறு வகைகள் சாகுபடி செய்துள்ளோம். சரியான இடைவெளியில், நான்கு கனமழை கிடைத்தாலே போதும், அறுவடை எடுத்துவிடலாம். ஆகமொத்தம், குளங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. நொய்யல் தண்ணீரை வாய்க்காலில் திருப்பி, பழைய தண்ணீரை வெளியேற்றி புது வெள்ளத்தை குளத்தில் தேக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.- விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை