எண்ணும் எழுத்தும் திட்டம்; ஆன்லைன் பயிற்சி வகுப்பு
உடுமலை : ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான, இரண்டாம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பு ஆன்லைனில் நடக்கிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 'எண்ணும் எழுத்தும்' என்ற திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் வழங்கப்படுகிறது.திட்டத்தின் துவக்கத்தில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே, எண்ணும் எழுத்தும் முறை இருந்தது. கடந்தாண்டு முதல், இத்திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இம்முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு, ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பருவத்துக்கும் பயிற்சி வகுப்பு நடக்கிறது. நேரடி பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ள முடியாத சமயங்களில், ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடக்கிறது.தற்போது உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு நடத்தும் ஆசிரிர்யர்களுக்கான, எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்துக்கான பயிற்சி வகுப்பு ஆன்லைனில் நடக்கிறது.பயிற்சி வகுப்பு 14ம்தேதி துவக்கப்பட்டு நாளையுடன் நிறைவடைகிறது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.பயிற்சியின் இறுதியில், அதற்கான மதிப்பீடுகளை எமிஸ் இணையதளத்தில் பதிவிடுவதற்கும், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.