ஆர்.டி.ஐ., தகவல் வழங்க இழுத்தடிப்பு; அலுவலருக்கு, ரூ.12 ஆயிரம் அபராதம்!
பல்லடம்; தகவல் வழங்க இழுத்தடித்த பொது தகவல் அலுவலருக்கு, ஆணையம் அபராதம் விதித்தது.பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி 43. கடந்த ஏப்., மாதம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கணபதிபாளையம் ஊராட்சியில் சில தகவல்களை கேட்டு, பொது தகவல் அலுவலருக்கு விண்ணப்பித்திருந்தார். பொது தகவல் அலுவலர், பதில் வழங்காமல் காலதாமதப்படுத்தி வந்துள்ளார்.இதனையடுத்து, சுப்புலட்சுமி, மேல்முறையீடு செய்தார். இதற்கும் பதில் கிடைக்காத நிலையில், 'தகவல் வழங்காமல் காலதாமதம் செய்து வரும் பொது தகவல் அலுவலருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் விசாரணை நடத்தி, தகவல்கள் வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்திய, அன்றைய பொது தகவல் அலுவலருக்கு, 12,500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.அன்றைய பொது தகவல் அலுவலர் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவரது இழுத்தடிப்பு செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆணையம், அவர் பொது அதிகார அமைப்புக்கு குறிப்பிட்ட அபராதம் செலுத்தியதற்கான சான்றை மனுதாரருக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைத்து, அதன் நகலையும் மனுதாரர் பெற்றுக் கொண்டதற்கான பதிவு தபால் ஒப்புகை அட்டை நகலையும் அறிக்கையாக தயார் செய்து, வரும், 27ம் தேதிக்குள் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என, தற்போதைய பொது தகவல் அலுவலர் மற்றும் பல்லடம் ஒன்றிய துணை பி.டி.ஓ., ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.