உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி ஆற்றில் அதிகரிக்கும் நீர் திருட்டு: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

அமராவதி ஆற்றில் அதிகரிக்கும் நீர் திருட்டு: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

உடுமலை;உடுமலை அமராவதி ஆற்றில் நீர் திருட்டு அதிகரித்துள்ள நிலையில், பாசன நிலங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய்களில் பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. வழியோரத்தில், ஆற்றின் இரு கரைகளிலும், மின், டீசல் வாயிலாக இயங்கும் மோட்டார்கள் அமைத்து சட்ட விரோதமாக பாசன நீர் திருடப்பட்டு வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமராவதி ஆற்றில், மடத்துக்குளம், சோழமாதேவி, கண்ணாடிபுத்துார், கடத்துார், காரத்தொழுவு ஆகிய பகுதிகளில், ஆற்றின் கரையில் மோட்டார்கள் அமைத்து, திண்டுக்கல் மாவட்டம், சாமிநாதபுரம், குமாரபாளையம், மிடாப்பாடி உள்ளிட்ட பகுதியிலுள்ள தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு அதிகளவு நீர் உறிஞ்சப்பட்டு, பெரிய அளவிலான குழாய்கள் வாயிலாக, சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுகிறது. அதே போல், தளவாய் பட்டணம் சுற்றுப்பகுதியிலுள்ள, செங்கல் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், அமராவதி ஆற்றிலிருந்து நீர் திருடப்பட்டு வருகிறது. மேலும், கல்லாபுரம் துவங்கி, தாராபுரம், கருர் வரை ஆற்றின் இரு புறமும், நுாற்றுக்கணக்கான மோட்டார்கள் அமைத்தும், பாசன நீர் திருடப்பட்டு வருகிறது. தற்போது, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு, டிராக்டர்கள், லாரிகள் வாயிலாக நேரடியாக நீர் எடுக்கப்பட்டு, வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் அவல நிலை காணப்படுகிறது. அமராவதி ஆறு மட்டுமின்றி, பிரதான கால்வாய் மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளிலும், தொழிற்சாலைகளுக்கு நீர் திருடப்பட்டு வருவது குறித்து, தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்தாலும், நீர் வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால், பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் முறையாக, பாசன நிலங்களுக்கு கிடைக்காமல், பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியாமலும், சாகுபடி செய்துள்ள பயிர்களை காப்பாற்ற முடியாமலும், விவசாயிகள் திணறி வருகின்றனர். விவசாயிகள் கூறியதாவது : ஆற்றில் திறக்கப்படும் நீரில், 50 சதவீதம் வரை, கரைகளில் மோட்டார் அமைத்தும், அருகில் தனியார் நிலங்களில் சட்ட விரோதமாக கிணறுகள் வெட்டி, பைப் லைன் அமைத்து, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு, பல கி.மீ., துாரம் பைப் லைன் அமைத்து, பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. நீர் திருட்டு குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தாலும், கண்டு கொள்வதில்லை. இதனால், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரில், சட்ட விரோதமாக, 50 சதவீதம் நீர் திருடப்படுகிறது. எனவே, அமராவதி பாசன திட்டத்தில், பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அதிகாரிகள் குழு அமைத்து, ஆறு மற்றும் கால்வாய் கரைகளில் முழுமையாக ஆய்வு செய்து, நீர் திருட்டை தடுக்கவும், சட்ட விரோதமாக நீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை