உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓணம் பண்டிகை கொண்டாட்டம்! திருப்பூரில் மலையாள மக்கள் குதுாகலம்

ஓணம் பண்டிகை கொண்டாட்டம்! திருப்பூரில் மலையாள மக்கள் குதுாகலம்

திருப்பூர்: மலையாள மக்களின் முக்கிய பண்டிகை ஓணம். கேரள மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட மலையாள மக்கள், தமிழகத்தின் பல இடங்களிலும் வசிக்கின்றனர். அந்த வகையில் தொழில் நகரமான திருப்பூரிலும் மலையாள இன மக்கள் பரவலாக வாழ்கின்றனர். திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளின் முகப்பில் வண்ண மலர்களால் 'பூக்களம்' அமைத்து, கூடி அமர்ந்து குதுாகலமடைந்தனர். விதம்விதமான காய்கறிகளில் உணவு சமைத்து, அடைபிரதமன் பாயசத்துடன் சமைத்து குடும்பத்துடன் ஒன்று கூடி விருந்துண்டு மகிழ்ந்தனர். தங்களது உறவினர்கள், நண்பர்கள், அருகே வீடுகளில் வசிப்போருக்கும் பகிர்ந்து வழங்கி, அன்பை பரிமாறிக் கொண்டனர். திருப்பூரில்பல தலைமுறையாக வசிக்கும் சில மலையாளிகளின் கருத்து

பகிர்ந்து வாழும் பண்பு

இரண்டு, மூன்று தலைமுறை கடந்தும் மலையாள மக்கள் தமிழகத்தின் பல இடங்களில் வாழ்கின்றனர். இருப்பினும், அவர்களின் பாரம்பரிய பண்டிகை என்பது, ஓணம் பண்டிகை தான். இது ஒரு மகிழ்ச்சியான நாள்; கேரளாவில் பின்பற்றப்படும் பண்டிகை முறையை பின்பற்றி கொண்டாடுகின்றனர். பகிர்ந்து வாழும் பண்டிகையின் பண்பை பின்பற்ற தவறுவதில்லை; தங்களது மகிழ்ச்சியை அருகில் உள்ளோரிடமும் பகிர்ந்து கொள்வர். - குட்டி கிருஷ்ணன், வெங்கடேஷ்வரா நகர், திருப்பூர்.

சமத்துவம் போற்றுகிறோம்

நாங்கள் திருப்பூரில், செட்டிலாகி, 40 ஆண்டுகள் கடந்துவிட்டது; ஓணம் தான் எங்களின் முக்கிய பண்டிகை என்பதால், பாரம்பரியம் போற்றும் வகையில் உற்சாகம் குறையால் அந்த பண்டிகையை கொண்டாடுகிறோம். அதே நேரம், அருகே வசிக்கும் மக்களுடன் இணக்கத்துடன், சமத்துவ, சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்கிலும், அவர்களது கலாசாரம், பாரம்பரியத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் பொங்கல் உள்ளிட்ட பண்டிகையையும் கொண்டாடுகிறோம். - பிந்து பாலமுருகன், சோளிபாளையம்.

தொடரும் பராம்பரியம்

நாங்கள் இரண்டு தலைமுறையாக திருப்பூரில் வசிக்கிறோம். கேரளாவில், ஓணம் என்பது, 10 நாள் விழா. வசதியான, கஷ்டப்படும் குடும்பத்தினர் என யாராக இருந்தாலும் மகிழ்வின் பண்டிகையாகவே கொண்டாடுவர். அவரவர் பகுதியில் விளையும் காய்கறிகளில் உணவு சமைத்து, இனிப்புடன் கூடிய, 25க்கும் மேற்பட்ட பல்சுவை உணவை, தலை வாழை இலையில் பரிமாறி சாப்பிடுவோம். திருப்பூரில் ஒரு நாள் மட்டுமே ஓணம் விடுமுறை என்பதால், அந்நாளில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடுகிறோம். - திவ்யலட்சுமி, தேவராயம்பாளையம்.

பாகுபாடு இருக்காது

நாங்கள், 25 ஆண்டுக்கு முன்பிருந்தே திருப்பூரில் வசிக்கிறோம். நாங்கள், 3 சகோதரிகளும் திருப்பூரில் செட்டில் ஆகியுள்ளேம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வீட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடுகிறோம். எங்களது தோழிகளை அழைத்து, அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வோம். ஜாதி, மதம், இனம் என்ற எந்த பாகுபாடுமின்றி ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறோம்; ஓணம் பண்டிகை உணர்த்துவதும் இதுதான். - சவிதா முரளி, காவிலிபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ